இந்தியாவில் தயாரிப்பைத் தொடங்கிய பின்பும் ஆப்பிள் ஐபோன்களின் விலை குறையாதது ஏன்?
செய்தி முன்னோட்டம்
பிற நாடுகளை விட இந்தியாவில் ஐபோன்களின் விற்பனை எப்போதுமே விண்ணை முட்டும் அளவிலேயே இருக்கும். அமெரிக்காவை விட சற்று அல்ல, மிக மிக அதிகமாகவே இருக்கும் இந்தியாவில் புதிய ஐபோன்களின் விலை.
சாதாரண ஐபோன் மாடல்களை விட, ஐபோன் ப்ரோ மாடல்களின் விலை அமெரிக்காவை விட 40,000 முதல் 50,000 ரூபாய் வரை இந்தியாவில் அதிகமாக இருக்கும்.
இந்தியாவில் ஐபோன்களை முன்னர் இறக்குமதி செய்தே விற்பனை செய்து வந்தது ஆப்பிள். இந்தியாவில் ஐபோனின் இறக்குமதி வரிகள் சேர்த்து, பிற நாடுகளை விட இந்தியாவில் மிக அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்பட்டு வந்தது.
ஆப்பிள்
இந்தியாவில் ஐபோன் தயாரிப்பு:
ஆனால், 2017ம் ஆண்டு முதல் இந்தியாவிலும் ஐபோன்களை அசெம்பிள் செய்யத் தொடங்கியது ஆப்பிள். முக்கியமாக இந்த ஆண்டு வெளியாகி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 ப்ளஸ் மாடல்கள் இரண்டுமே முழுமையாக இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டது தான் எனத் தெரிவித்தது ஆப்பிள்.
எனினும், இந்தியாவில் அசம்பிள் செய்யப்படும் ஐபோன்களின் விலைகளிலும் எந்த மாற்றமும் இல்லை. இந்தியாவில் தயாரிப்பைத் தொடங்கிய பின்பும், ஏன் விலை குறையாமல் அதே விலையிலேயே விற்பனையாகி வருகின்றன ஐபோன்கள்?
ஒரு பொருளுக்கான தேவை குறையும் போது தான் அதன் விலையும் குறையும். இந்தியாவில் ஐபோன்களின் விலை அதிகளவில் இருந்தாலும், அதனையும் வாங்குவதற்கென தனி வாடிக்கையாளர் வட்டம் இருக்கிறது.
ஐபோன்
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் அசெம்ளி:
விலைக்குறைப்பு என்ற பேச்சுக்கே ஆப்பிளின் அகராதியில் இடமில்லை. ஐபோன்களை மக்கள் இந்தளவிற்கு விரும்புவதற்கு அதன் விலையும் ஒரு காரணம். ஆம், குறைந்த விலையில் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டால், அதற்கான ப்ரீமியம் அந்தஸ்தும் குறையும் எனக் கருதுகிறது ஆப்பிள்.
மேலும், இது மட்டும் இந்தியாவில் ஆப்பிளின் விலை குறையாததற்குக் காரணம் அல்ல. 15 சீரிஸில் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களை இன்னும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்தே விற்பனை செய்து வருகிறகது ஆப்பிள்.
எனவே, அந்த மாடல்களின் விலைகள் குறையாதது ஆச்சரியமில்லை. 15 மற்றும் 15 ப்ளஸ் மாடல்கள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டாலும், அதற்குத் தேவையான எலெக்ட்ரானிக் பாகங்கள் இன்னும் இறக்குமதி செய்யப்பட்ட பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியா
குறையாத இறக்குமதி வரிகள்:
ஐபோன்களை முழுமையாக இறக்குமதி செய்யவில்லை என்றாலும், அதற்கான பாகங்களை இறக்குமதி செய்வதற்கும் கூடுதலான இறக்குமதி வரிகளையே செலுத்தி வருகிறது ஆப்பிள். இதுவும் இந்தியாவில் ஐபோன்களின் விலைகள் குறையாததற்கு ஒரு காரணம்.
மேலும், இந்தியாவில் புதிய ஐபோன்களின் விற்பனையை விட, புதிய ஐபோன்கள் வெளியான பின்பு விலை குறையும் முந்தைய மாடல் ஐபோன்களின் விற்பனையே அதிகமாக இருக்கும். இதுவரையிலான ஐபோன் விற்பனை நிலவரங்கள் அதனையே சுட்டிக் காட்டுக்கின்றன.
தற்போது ஐபோன் 15 வெளியாகியிருக்கும் நிலையில், விலை குறைந்திருக்கும் ஐபோன் 14 மற்றும் ஐபோன் 13 மாடல்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவில் புதிய ஐபோன்களின் விற்பனையை விட முந்தைய மாடல் ஐபோன்களின் விற்பனையிலேயே அதிக வருவாய் ஈட்டுகிறது ஆப்பிள்.
ஐபோன் 15
விலை குறைந்த முந்தைய மாடல் ஐபோன் விலைகள்:
சாதாரணமாகவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.80,000 விலையில் வெளியான ஐபோன் 13 ஆனது தற்போது ரூ.50,000 விலையில் விற்பனையில் கிடைக்கிறது. இத்துடன் விழாக் காலத் தள்ளுபடிகளும் இணைந்து ரூ.40,000-த்திற்கும் குறைவான விலையில் கூடி முந்தைய தலைமுறை ஐபோன்களை நம்மால் வாங்க முடியும்.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களுடன் இணைந்து, இந்தியாவில் முந்தைய தலைமுறை ஐபோன் விற்பனையிலும் கூடுதல் கவனம் செலுத்துகிறது ஆப்பிள்.
மேலும், தற்போது தான் இந்தியாவில் ஆப்பிள் மீதான மோகம் மிகவும் அதிகரித்திருக்கிறது. தேவை அதிகமாக இருக்கும் இடத்தில், தங்களுடைய பொருளின் விலையை ஆப்பிள் குறைப்பதற்கா காரணம் எதுவும் இல்லாத நிலையில், ஆப்பிள் ஏன் விலையைக் குறைக்க வேண்டும்?