அமெரிக்காவில் சியாட்டிலில் இருந்து மயாமி நகருக்குக் குடிபெயரும் ஜெஃப் பஸாஸ்
உலகின் இரண்டாவது பணக்காரரும், அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெஃப் பஸாஸ், 29 ஆண்டுகளாகக் தான் குடியிருந்த சியாட்டில் நகரை விட்டு அமெரிக்காவின் ஃப்ளேரிடா மாகாணத்திலுள்ள மயாமி நகருக்கு குடிபெயர்வதாக அறிவித்திருக்கிறார். இந்த இடமாற்றம் குறித்த தகவலை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழைய காணொளி ஒன்றுடன் பகிர்ந்திருக்கிறார் ஜெஃப். அந்தக் காணொளியில் அமேசானின் முதல் அலுவலகத்தில் ஜெஃப் இருக்கும் காட்சிகள் பதிவாகியிருக்கின்றன. 1990-களில் சியாட்டிலில் தங்களுடைய வீட்டின் கேரேஜையே அமேசான் நிறுவனத்தின் முதல் அலுவலகமாகப் பயன்படுத்தியிருக்கிறார் அவர். அந்தக் காணொளியைப் பகிர்ந்து, தன்னுடைய சியாட்டில் நகர நினைவுகள் குறித்தும் அந்த இன்ஸ்டாகிராம் பதிவில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவர்.
புதிய இடத்துக்கு குடிபெயரும் ஜெஃப் பஸாஸ்:
தன்னுடைய சிறுவயதில், தான் மயாமியிலே குடியிருந்ததாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் ஜெஃப் பஸாஸ். எப்போதும் தன்னுடைய மிகப்பெரிய பக்கபலமாக தன்னுடையே பெற்றோர்கள் இருந்திருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கும் அவர், அவர்கள் மயாமி நகருக்கு குடிபெயர்ந்த காரணத்தினாலேயே அவர்களுடன் இருக்க வேண்டும் என தானும் குடிபெயர்வதாகக் கூறியிருக்கிறார். மேலும், அவருடைய விண்வெளி வணிக சேவை நிறுவனமான ப்ளூ ஆரிஜின் நிறுவனத்தின் பெரும்பாலான செயல்பாடுகள், ஃப்ளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கனாவரலுக்கு மாறி வருவதாகவும், அவர் மயாமிக்கு குடிபெயர்வதற்கு அதுவும் ஒரு காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இந்த இடமாறுதலைத் தொடர்ந்து மயாமி நகரின் 'பில்லியனர்ஸ் பங்கர்ஸில்' 79 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் புதிய சொத்து ஒன்றையும் ஜெஃப் பஸாஸ் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.