போன் சுவிட்ச் ஆஃப் ஆனாலும் சரியான நேரத்திற்கு மெசேஜ் போகும்: Whatsapp-பில் அறிமுகமான புதிய 'ஷெட்யூல் மெசேஜ்' வசதி
செய்தி முன்னோட்டம்
உலகின் முன்னணி செய்திப் பரிமாற்றச் செயலியான வாட்ஸ்அப், பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் காத்திருந்த 'மெசேஜ் ஷெட்யூலிங்' எனப்படும் செய்திகளைத் திட்டமிட்டு அனுப்பும் புதிய வசதியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. தனிநபர் உரையாடல்கள் மற்றும் குழு உரையாடல்கள் ஆகிய இரண்டிலும் இனி குறிப்பிட்ட நேரத்திற்கு செய்திகள் தானாக சென்றடையும் வகையில் பயனர்களால் அமைத்துக் கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆகிய இரு இயங்குதளங்களிலும் உலகளாவிய பயனர்களுக்கு இந்தப் புதிய வசதி படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
வழிமுறை
வாட்ஸ்அப்பில் மெசேஜ்களை ஷெட்யூல் செய்வது எப்படி?
இந்த புதிய வசதியைப் பயன்படுத்துவதற்கு தனிப்பட்ட அமைப்புகளுக்குள் செல்ல வேண்டிய அவசியமில்லை.
வாட்ஸ்அப் செயலியைப் புதுப்பித்த பிறகு, சம்பந்தப்பட்ட தனிநபர் அல்லது குழு உரையாடலைத் திறந்து அனுப்ப வேண்டிய செய்தியை டைப் செய்ய வேண்டும்.
பின்னர், வழக்கம்போல அனுப்பு Send button-னை ஒருமுறை அழுத்துவதற்குப் பதிலாக, அதனைச் சற்று நேரம் அழுத்திப் பிடிக்க வேண்டும்.
உடனடியாக திரையில் தேதி மற்றும் நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் தோன்றும்.
பயனர்கள் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் முதல் அதிகபட்சம் 14 நாட்கள் வரையிலான எந்தவொரு நேரத்தையும் தேர்ந்தெடுத்து தங்கள் செய்திகளை திட்டமிட்டுக் கொள்ளலாம்.
சிறப்பு அம்சம்
போன் அணைக்கப்பட்டிருந்தாலும் செயல்படும் சிறப்பு அம்சம்
இந்த வசதியின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், திட்டமிடப்பட்ட நேரத்தில் பயனரின் கைபேசி அணைக்கப்பட்டிருந்தாலோ அல்லது இணையத் தொடர்பு இல்லாத பகுதியில் இருந்தாலோ கூட, குறிப்பிட்ட நேரத்தில் அந்தச் செய்தி பெறுநருக்குத் துல்லியமாகச் சென்றடைந்துவிடும்.
எழுத்து வடிவிலான செய்திகள் மட்டுமின்றி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இவ்வாறு திட்டமிட்டு அனுப்ப முடியும்.
மேலும், வழக்கம் போலவே இச்செய்திகளும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் பாதுகாப்புடன் அனுப்பப்படுவதோடு, பெறுநருக்கு இது திட்டமிட்டு அனுப்பப்பட்ட செய்தி என்பதற்கான எந்தவொரு தனி அடையாளமும் தெரியாது.
எடிட் வசதி
திட்டமிட்ட செய்திகளைக் கண்காணித்தல் மற்றும் நீக்கும் வசதி
பயனர்கள் தாங்கள் எதிர்காலத்திற்காகத் திட்டமிட்டு வைத்துள்ள அனைத்துச் செய்திகளையும் ஒரே இடத்தில் பார்வையிட முடியும்.
ஒருவேளை திட்டமிட்ட பிறகு அந்தச் செய்தியை அனுப்ப வேண்டாம் எனக் கருதினால், அது அனுப்பப்படுவதற்கு முன்பாகவே அதனை டெலீட் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஏற்கனவே திட்டமிடப்பட்ட நேரத்தை மீண்டும் திருத்தும் வசதி குறித்துத் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
பயனாளர்கள்
தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குப் பயன்
வெவ்வேறு நேர மண்டலங்களில் வசிக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு நள்ளிரவில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கவும், அலுவலகப் பணிகளை ஒருங்கிணைக்கவும் இந்த வசதி பெரிதும் உதவும்.
அதேபோல், வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் நினைவூட்டல்கள் மற்றும் முக்கியத் தகவல்களை அனுப்பவும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
போட்டிச் செயலிகளான டெலிகிராம் மற்றும் சிக்னல் ஆகியவற்றில் ஏற்கனவே இந்த வசதி நடைமுறையில் இருந்த நிலையில், மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தற்போது இந்த வசதியை இணைத்து தனது பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது.