Loading...
மைசூருவில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்: இதன் சிறப்புகள் என்ன?
மைசூருவில் இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம் திறப்பு

மைசூருவில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் 8K LED கோளரங்கம்: இதன் சிறப்புகள் என்ன?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 14, 2026
04:45 pm

செய்தி முன்னோட்டம்

கர்நாடகாவின் மைசூருவில் இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA) மற்றும் மைசூரு பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கியுள்ள காஸ்மோஸ்-மைசூரு கோளரங்கத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்துள்ளார். வழக்கமான கோளரங்கங்களில் சக்திவாய்ந்த புரொஜெக்டர்கள் மூலம் வளைந்த சுவரில் பிம்பங்கள் வீசப்படும் நிலையில், இங்கு குவிமாடமே ஆயிரக்கணக்கான எல்.இ.டி பேனல்களால் மூடப்பட்டுள்ளது. இதனால் ஒரு பிரம்மாண்டமான வளைந்த தொலைக்காட்சித் திரை போல நேரடியாக ஒளியை உருவாக்கி, ஆழமான கருப்பு நிறத்தையும் துல்லியமான விண்வெளிக் காட்சிகளையும் வழங்குகிறது.

குவிமாடத்தின் சிறப்பம்சங்கள்

4.2 கோடி எல்.இ.டி விளக்குகளும் 15 மீட்டர் அகல குவிமாடத்தின் சிறப்பம்சங்களும்

இந்த நவீன கோளரங்கம் 15 டிகிரி கோணத்தில் சாய்வாக அமைக்கப்பட்ட 15 மீட்டர் அகலம் கொண்ட பிரம்மாண்டக் குவிமாடத்தைக் கொண்டுள்ளது.

இதன் உட்புறத் திரையில் சுமார் 6,150 எல்.இ.டி பேனல்களும், அவற்றில் ஏறத்தாழ 4.2 கோடி நுண்ணிய எல்.இ.டி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

ஒவ்வொரு விளக்கையும் தனித்தனியாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதால், புரொஜெக்டர் அமைப்புகளில் ஏற்படும் ஒளி இழப்பு தவிர்க்கப்பட்டு நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்கள் 8K தெளிவுத்திறனில் தத்ரூபமாக தெரிகின்றன.

தொலைநோக்கி

விண்வெளித் தொலைநோக்கிகளின் நேரடித் தரவுகளை காட்சிப்படுத்தும் நவீனத் திறன்

காஸ்மோஸ்-மைசூரு கோளரங்கம் வழக்கமான பதிவுசெய்யப்பட்ட விண்வெளிக் காட்சிகளை திரையிடுவதோடு நின்றுவிடாமல், நவீன அறிவியல் ஆராய்ச்சிகளுக்கும் வழிவகை செய்கிறது.

இதன் அதிநவீன 8K கணினி அமைப்பு, உலகளாவிய தொலைநோக்கிகளிலிருந்து பெறப்படும் நேரடி வானியல் தரவுகளையும் நிகழ்நேரக் காட்சிகளையும் (Live Visualisations) உடனுக்குடன் திரையில் காட்சிப்படுத்தும் திறன் கொண்டது.

இதன் மூலம் சிக்கலான வானியல் நிகழ்வுகளை மாணவர்களும் ஆராய்ச்சியாளர்களும் மிக எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

வானியல் பயிற்சி மையம்

பொதுமக்கள் காட்சிகளைத் தாண்டி மாணவர்களுக்கான வானியல் பயிற்சி மையமாக செயல்படும்

பொதுமக்களுக்கான பொழுதுபோக்குத் தலமாக மட்டுமல்லாமல், ஒரு முழுமையான வானியல் கல்வி மற்றும் பயிற்சி மையமாக காஸ்மோஸ்-மைசூரு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவிற்கு முன்பாகவே கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய வானியற்பியல் நிறுவனம் சார்பில் 150-க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு 40,000-க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் மாணவர்களுக்கான சிறப்புப் பயிற்சிகள், தரவுப் பகுப்பாய்வு மற்றும் வகுப்பறைக் கற்றல் திட்டங்கள் இங்கு விரிவுபடுத்தப்பட உள்ளன.

ADVERTISEMENT