நிலவுக்கு செல்லும் புதிய ரோவர்.. அறிமுகப்படுத்திய வென்சூரி நிறுவனம்!
மோனகோ நாட்டைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான வென்சூரி, சந்திரனில் பயன்படுத்தும் வகையிலான 'FLEX' (Flexible Logistics and Exploration) என்ற எலெக்ட்ரிக் லூனார் ரோவரை முதன் முறையாக அறிமுகப்படுத்தியது. இந்த லூனார் ரோவரை 2026-ம் ஆண்டு தங்களுடைய புதிய திட்டத்தின் மூலம் நிலவுக்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கொண்டு செல்ல ஏற்கனவே திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்ற பிற ரோவர்களுடன் ஒப்பிடும் போது, FLEX ரோவரின் பெரிய அளவும், தொலைவிலிருந்து இயக்கும் தன்மையும் அதனை தனித்துவமாகக் காட்டுகின்றன. இந்த ரோவரை உருவாக்குவதற்கான திட்டம் 2019-ல் தொடங்கப்பட்டது. இந்த ரோவருக்கான வீல்கள், சோலார் பேனல்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பொருட்களை சுவிட்சர்லாந்தில் ஒரு குழுவும், டிசைன், மெக்கானிசம் மற்றும் சாஃப்ட்வேரை அமெரிக்காவில் மற்றொரு குழுவும் உருவாக்கியிருக்கின்றனர்.
FLEX ரோவர்:
நிலவில் சவாலான சூழ்நிலையை சமாளிக்க மேம்படுத்தப்பட்ட வகையில் இந்த ரோவரை உருவாக்கியிருக்கின்றனர். இருளில் இயங்கும் தன்மை, கதிர்வீச்சை ஏற்றுக் கொள்ளும் தன்மை மற்றும் -230 டிகிடி செல்சியல் வெப்பநிலையிலும் தாக்குப்பிடிக்கும் தன்மை ஆகிய சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது FLEX ரோவர். 2026-ல் மனிதர்களுடன் நிலவுக்கு செல்லவிருக்கும் இந்த ரோவரை நிலவில் இருக்கும் மனிதர்களோ அல்லது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தோ இயக்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு மனிதர்களை ஏற்றிக் கொண்டு பயணிக்கும் அளவிற்கு பெரிதாகவும், திடமாகவும் இந்த புதிய ரோவர் உருவாக்கப்பட்டிருக்கிறது. இயக்கத்தில் இருக்கும் போதோ அல்லது நிலையாக இருக்கும் போதோ சார்ஜ் ஆகும் வகையில் சோலார் தகடுகள் இந்த ரோவரில் பொருத்தப்பட்டிருக்கின்றன.