சூப்பர் மார்க்கெட்டுகளில் தோட்டாக்களை விற்க AI வெண்டிங் மெஷின்களை அறிமுகம் செய்தது அமெரிக்க நிறுவனம்
அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களான ஓக்லஹோமா மற்றும் அலபாமாவில் தோட்டாக்களை விற்பனை செய்யும் வெண்டிங் மெஷின்களை அமெரிக்கன் ரவுண்ட்ஸ் எனும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வெண்டிங் மெஷின்கள் வாங்குபவர்களின் சட்டப்பூர்வ வயதை சரிபார்க்க செயற்கை நுண்ணறிவு(AI) மற்றும் முக அங்கீகார தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன. "எங்கள் ஸ்மார்ட் ரீடெய்ல் ஆட்டோமேட்டட் அம்மோ டிஸ்பென்சர்கள் உள்ளமைக்கப்பட்ட AI தொழில்நுட்பம், அட்டை ஸ்கேனிங் திறன் மற்றும் முகத்தை அடையாளம் காணும் மென்பொருள் ஆகியவற்றைக் கொண்டுள்ளன" என்று அமெரிக்கன் ரவுண்ட்ஸ் நிறுவனத்தின் இணையதளம் கூறுகிறது. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தும் நபர் ஸ்கேன் செய்யப்பட்ட அடையாளத்துடன் ஒத்து போகிறாரா என்பதை இதன் மென்பொருள் கூட்டாக உறுதி செய்கிறது.
துப்பாக்கிகளினால் அமெரிக்காவில் ஏற்படும் பிரச்சனைகள்
இந்தியாவை போலல்லாமல், அமெரிக்காவில் துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றை வாங்குவது மிக சாதாரண ஒரு விஷயமாகும். பொது அங்காடிகள், சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களிலேயே அரசாங்கத்தின் அனுமதியுடன் துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன. அதை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கி கொள்ளலாம். இதனாலேயே, அந்நாட்டில் துப்பாக்கிகளால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. எனினும், வெண்டிங் மெஷின்களில் இருந்து தின்பண்டங்களை வாங்குவது போலல்லாமல், தோட்டாக்களை வாங்குவது என்பது கடிமான செயலமுறை ஆகும். கூட்டாட்சி விதிமுறைகள் மற்றும் பாதுகாப்புக் கவலைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அதை வாங்குவதற்கு நிறைய விதிமுறைகள் உள்ளன.