பேடிஎம், கூகுள் பே, போன்பே இருந்தால் போதும்; அவசர காலங்களில் இன்டர்நெட் இல்லாவிட்டாலும் பணம் அனுப்பலாம்
அவசர காலங்களில் நிதி அணுகலை மேம்படுத்தும் நோக்கில், பேடிஎம், கூகுள் பே மற்றும் போன்பே போன்ற செயலிகளில் கிடைக்கும் யுபிஐ லைட் அம்சம், இணைய இணைப்பு தேவையில்லாமல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பயனர்களுக்கு உதவுகிறது. ஃபெஞ்சல் புயலால் சமீபத்தில் பெய்த கனமழையால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இணைய சேவைகள் பாதிக்கப்பட்டது போன்ற சூழ்நிலைகளில் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்தது. புதுச்சேரியில் ஒரே நாளில் 50 செ.மீ.க்கு மேல் மழை பதிவானது. இதனால் பல குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இத்தகைய சவால்களுக்கு மத்தியில், பால், காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை அணுகுவது முக்கியமானதாக மாறியது.
யுபிஐ லைட் சேவையின் சிறப்பம்சம்
யுபிஐ லைட் ஆனது, செயலியில் நிதியை முன்கூட்டியே ஏற்றுவதன் மூலம் இணையத் தடைகளின் போதும் பணம் செலுத்த பயனர்களை அனுமதிக்கிறது. ஆரம்பத்தில், பயனர்கள் இந்த அம்சத்தின் மூலம் ₹2,000 வரை டாப்அப் செய்து, ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ₹500 வரை செலுத்தும் வகையில் இருந்தது. இருப்பினும், ரிசர்வ் வங்கி இப்போது வரம்புகளை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் ₹5,000 ரீசார்ஜ் செய்ய அனுமதிக்கிறது மற்றும் ₹1,000 வரை ஒற்றை பரிவர்த்தனைகளை அனுமதிக்கிறது. மேலும், பேடிஎம் இதில் ஒரு ஆட்டோ டாப்-அப் அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பயனர்கள் கணக்கில் பணம் தீர்ந்தவுடன் வங்கிக் கணக்கில் இருந்து தானாக பணம் டாப் அப் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.