தகவல் திருட்டுக்கு வாய்ப்பு, அனைத்து செயலிகள் மற்றும் மென்பொருட்களை அப்டேட் செய்ய வலியுறுத்தல்
நமது ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளில் உபயோகிக்கும் பல்வேறு மென்பொருட்களில் பயனர்களின் தகவல்களை பாதிக்கக்கூடிய கோளாறு ஒன்றைக் கண்டறிந்திருக்கிறார்கள். இந்தக் கோளாறானது, libwebp library-ஐ பயன்படுத்தும் அனைத்து மென்பொருட்களிலும் காணப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள். நமது ஸ்மார்ட்போன் மற்றும் கணினிகளில் WebP பார்மெட்டில் இருக்கக்கூடிய புகைப்படங்களை அனுகுவதற்கு libwebp library பயன்படுகிறது. மேற்கூறிய வகையில் பல்வேறு மென்பொருட்கள் மற்றும் செயலிகளில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையிலான கோளாறு இருப்பதனை, WebP-யை உருவாக்கிய கூகுளும் உறுதி செய்திருக்கிறது. மேலும், இந்தக் கோளாறை சரி செய்வதற்கான பாதுகாப்பு அப்டேட்டையும் அந்நிறுவனம் தங்களுடைய கூகுள் தேடுபொறிக்கு வழங்கியிருக்கிறது.
என்ன விதமான பாதிப்புகள் ஏற்படுத்தும்?
இந்த கோளாறைக் கொண்டு, நமது கணினியில் அல்லது மொபைலில் உள்ள தகவல்களை திருடுவது, நம்முடைய மின்சாதனத்தின் நம்முடைய அனுமதி இன்றியே இயக்குவது போன்ற பல்வேறு விதமான பாதிப்புகளை இதனைக் கொண்டு ஏற்படுத்த முடியும். மேற்கூறிய libwebp library மென்பொருள் கருவியை கிட்டத்தட்ட பெரும்பாலான மென்பொருள் நிறுவனங்கள் தங்களுடைய மென்பொருள் தயாரிப்புகளில் பயன்படுத்தியிருக்கின்றன. அந்நிறுவனங்கள் அனைத்தும், தங்களுடைய மென்பொருளில் இருந்து இந்தப் பாதுகாப்பு குறைபாட்டைக் களைவதற்கான பாதுகாப்பு அப்டேட்களை வெளியிட்டு வருகின்றன. பயனர்களை தங்களுடைய ஸ்மார்ட்போன் மற்றும் கணினியில் உள்ள அனைத்து செயலிகள் மற்றும் மென்பொருட்களையும் அப்டேட் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.