Page Loader
வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ்
வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ்

வாடிக்கையாளர்களுக்கு உதவ புதிய AI சாட்பாட் ஒன்றை உருவாக்கி வரும் உபர் ஈட்ஸ்

எழுதியவர் Prasanna Venkatesh
Aug 29, 2023
10:12 am

செய்தி முன்னோட்டம்

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகளை பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய சேவைகளில் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன அல்லது தொடங்கத் திட்டமிட்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது உபர் ஈட்ஸும் (Uber Eats) இணைந்திருக்கிறது. வாடிக்கையாளர்கள், விரைவாக தங்களுக்கு வேண்டிய உணவகத்தையும், உணவுகளையும் தேர்ந்தெடுக்க உதவும் வகையில் புதிய AI சாட்பாட் ஒன்றை அந்நிறுவனம் உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை தங்களுடைய கேப் மற்றும் கொரியர் சேவைகளில் பயன்படுத்தி வருவதாக, இம்மாதத் தொடக்கத்தில் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருகிறார் உபர் நிறுவனத்தின் சிஇஓ தாரா கோஸ்ரோஷாகி.

உபர்

போட்டிகளைச் சமாளிக்க உபர் ஈட்ஸின் திட்டம்: 

உபர் நிறுவனத்தின் வருவாயில் மூன்றில் ஒரு பங்கு உபர் ஈட்ஸ் சேவையின் மூலமே பெறப்படுகிறது. அமெரிக்காவின் உபர் ஈட்ஸ் சேவையுடன் டோர்டேஷ் மற்றும் இன்ஸ்டாகார்ட் ஆகிய இரு நிறுவனங்கள் போட்டியில் இருக்கின்றன. இந்த இரு நிறுவனங்களுமே செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய சாட்பாட்டை தங்கள் சேவையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன. அவற்றுடன் போட்டியிடவே புதிய AI சாட்பாட் ஒன்றை உபர் ஈட்ஸ் நிறுவனமும் உருவாக்கி வருகிறது. உபர் ஈட்ஸின் புதிய AI சாட்பாட்டில், நம் உணவிற்கான பட்ஜெட் மற்றும் உணவு விருப்பங்களைத் தெரிவித்து விட்டால் போதும், அதற்கு ஏற்றாற் போல பல்வேறு உணவகங்கள் வழங்கும் உணவுகளின் பட்டியலை நமக்கு வழங்கி விடுமாம். விரைவில் இந்த வசதியை தங்கள் சேவையில் அறிமுகப்படுத்தவிருக்கிறது அந்நிறுவனம்.