ட்விட்டருக்கு மாற்றாக ஒரு சமூக வலைத்தளம்.. உருவாக்கி வரும் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ!
எலான் மஸ்க் வாங்கிய பிறகு ட்விட்டரில் பல்வேறு மாற்றங்கள். பயனர்களில் இருந்து ட்விட்டரின் ஊழியர்கள் வரை பலரும் அந்த மாற்றத்தைச் சந்தித்து விட்டனர். ட்விட்டருக்கு மாற்றாக வேறு குறும்பதிவு சமூக வலைத்தளங்கள் தற்போது பயனர்களுக்கு தேவைப்படுகிறது. முன்னர் ட்விட்டர் கொடுத்த பயனர் அனுபவமும், அதன் சேவைகளும் சமூக வலைத்தள பயனர்களுக்கு தேவைப்படுகிறது. பயனர்கள் கேட்கும் அதே நேரத்தில் ட்விட்டரின் முன்னாள் சிஇஓ-வான ஜாக் டார்ஸேவும் புதிய சமூக வலைத்தளமொன்றை உருவாக்கி சோதனை செய்து வருகிறார். அந்த வலைத்தளத்தை 'ட்விட்டர் 2' என்று அழைக்கலாம், அந்த அளவிற்கு ட்விட்டரைப் போன்ற அதனை உருவாக்கியிருக்கிறார். ப்ளூஸ்கை (Bluesky) எனப் பெயரிடப்பட்ட புதிய சமூக வலைத்தளத்தை தற்போது பீட்டா முறையில் சோதனை செய்து வருகிறார் அவர்.
ஜாக் டார்ஸேயின் ப்ளூஸ்கை:
ட்விட்டரின் சிஇஓ-வாக இருந்த போது பயனர்களின் தனியுரமைக்கு பிரச்சினை இல்லாத வகையிலேயே ட்விட்டர் சேவையை வழங்கி வந்தார். இதனால், ட்விட்டரில் விளம்பரங்களைக் கூட அவர் அனுமதிக்கவில்லை. இந்நிலையில், புதிய ப்ளூஸ்கை சமூக வலைத்தளத்தை டீசென்ட்ரலைஸ்டு சேவையாக உருவாக்கி வருகிறார் ஜாக் டார்ஸே. டீசென்ட்ரலைஸ்டு என்றால் பயனர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள், பயனர்கள் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் எந்தவொரு நிறுவனமும் சொந்த கொண்டாட முடியாத வகையில் தனிப்பட்ட சர்வர்களில் சேமிக்கப்படும். அந்தத் தகவல்களை எந்த நிறுவனமும் பயன்படுத்த முடியாது. இதன் மூலம் பயனர்களின் தனியுரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என நம்புகிறார் ஜாக். ஆனால், தற்போது இன்வைட்-ஒன்லி முறையில் மட்டுமே பயனர்கள் இத்தளத்தைப் பயன்படுத்தமுடியும். விரைவில் இது பொதுப் பயனர்களின் பயன்பாட்டிற்கும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.