இனி குறுஞ்செய்தி அனுப்பவும் கட்டணம்.. ட்விட்டரின் புதிய திட்டம் என்ன?
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியதில் இருந்து, அதில் பல்வேறு முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறார் எலான் மஸ்க். அதில் முக்கியமான மாற்றங்களானது அந்நிறுவனத்தின் செலவுகளைக் குறைப்பதையும், வருவாயைப் பெருக்குவதையும் மையப்படுத்தியதாகவே இருந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ப்ளூ டிக் வசதியையும் ட்விட்டர் ப்ளூவுடன் இணைத்து கட்டண சேவையாக்கினார் எலான் மஸ்க். கட்டணம் செலுத்தாத ட்விட்டர் பயனர்களின் ப்ளூ டிக்கை நீக்கியும், ட்விட்டர் ப்ளூ சேவையை கட்டாயப்படுத்தி பயனர்களிடம் திணித்து வருகிறது ட்விட்டர். இந்நிலையில், அந்த சேவைத் தளத்தின் குறுஞ்செய்தி வசதி குறித்து எலான் மஸ்க் பதிவிட்ட ட்வீட் ஒன்று தற்போது ட்விட்டர் பயனர்களிடையே பேசு பொருளாகியிருக்கிறது.
குறுஞ்செய்தி வசதிக்கும் கட்டணம்:
ட்விட்டர் ப்ளூ சேவையை தங்கள் பயனர்களை வாங்க வைக்க பல்வேறு வகையிலும் முயற்சி செய்து வருகிறது ட்விட்டர் நிறுவனம். ப்ளூ டிக்குடன் சேர்த்து பல்வேறு புதிய வசதிகளையும் ட்விட்டர் ப்ளூ கட்டண சேவையின் கீழே வழங்கி வருகிறது அந்நிறுவனம். நம்மை பின்தொடராத ட்விட்டர் பயனர்களுக்கு, அந்தத் தளத்தில் குறுஞ்செய்தி அனுப்பும் வசதியை ட்விட்டர் ப்ளூ வாடிக்கையாளர்களுக்கு மட்டும் குறைக்கவிருப்பதாக தன்னுடைய ட்வீட் மூலம் தெரிவித்திருக்கிறார் எலான் மஸ்க். மேலும், இந்த புதிய வசதியானது இந்த வாரத்திலேயே அமலுக்கு வரலாம் எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். AI பாட்கள் ட்விட்டர் பயனர்களுக்கு அதிகளவில் தேவையில்லாத குறுஞ்செய்திகளை அனுப்புவதைத் தடுக்கவே, இந்த புதிய அப்டேட்டைக் கொண்டு வந்திருப்பதாக காரணமும் கூறியிருக்கிறார் எலான் மஸ்க்.