இனி twitter.com இல்லை, X.com.. மாற்றத்திற்குத் தயாராகி வரும் ட்விட்டர்
கூகுள் முகப்புப் பக்கத்திற்குச் சென்று twitter.com என்ற வலைத்தளப் பெயரை உள்ளீடு செய்யாமல் x.com என்ற பெயரை உள்ளீடு செய்தாலும், அது தற்போது ட்விட்டர் பக்கத்திற்கே கூட்டிச் செல்கிறது. ஆம், ட்விட்டர் என்ற பெயரை 'X' என மாற்றவிருக்கிறார் எலான் மஸ்க். இந்த மாற்றம் குறித்த பல்வேறு பதிவுகளை ட்விட்டர் பக்கத்தில் நேற்று முதல், அவர் பதிவிட்டு வருகிறார். இன்று இந்த பெயர் பயன்பாட்டுக்கு வரும் எனவும் நேற்றைய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார் எலான். பெயர் மாற்றம் மட்டுமல்லாது, ட்விட்டரின் செயல்பாடுகள் முதல் கொள்கைகள் வரை அனைத்தும் மாறவிருக்கிறது. இதுவரை ஒரு சமூக வலைத்தளமாக மட்டும் இயங்கி வந்த ட்விட்டர், இனி பலதரப்பட்ட சேவைகள் நிறைந்த ஒரே தளமாகப் போகிறது.
மாற்றம் காணவிருக்கும் ட்விட்டர்:
சீனாவில் 'வீசாட்' என்றொரு செயலி பயன்பாட்டில் இருக்கிறது. அந்த செயலியானது, சீன ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, சமூக வலைத்தளமாகவும், குறுஞ்செய்தி செயலியாகவும், உணவு டெலிவரி சேவை மற்றும் கேப் புக்கிங் எனப் பல்வேறு சேவைகளுக்கான ஒரே தளமாக செயல்பட்டு வருகிறது. X-ஆக மாறவிருக்கும் ட்விட்டரையும், அப்படியான ஒரு தளமாக மாற்றவே விரும்புகிறார் எலான் மஸ்க். அந்த நோக்கத்துடனேயே ட்விட்டரையும் வாங்கியிருக்கிறார் அவர். ட்விட்டரின் இந்த மாற்றம் குறித்து அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான லிண்டா யாக்கரினோவும், ட்விட்டரில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டிருக்கிறார். அதில் ட்விட்டர் மேற்கூறிய வகையில் பல்வேறு சேவைகளுக்கான ஒரே செயலியாக மாறவிருப்பதை அவரும் உறுதி செய்திருக்கிறார். மேலும், கடந்த 8 மாதங்களாகவே இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.