
மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காண AI தொழில்நுட்பம்.. அறிமுகப்படுத்தியது ட்ரூகாலர் நிறுவனம்!
செய்தி முன்னோட்டம்
ஆன்லைன் மோசடி செய்பவர்கள் பிரதானமாகத் தேர்தெடுக்கும் ஒரு வழி குறுஞ்செய்திகள் தான். இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வந்த ஸ்மார்ட்போன் பயன்பாடு இன்று மிக அதிக அளவில் இருக்கிறது.
ஒரு மோசடி குறுஞ்செய்தியை லட்சம் பலருக்கு அனுப்புவதன் மூலம் சில ஆயிரம் பேராவது மோசடி செய்வர்களின் வலையில் சிக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ட்ரூகாலர் செயலியைப் பயன்படுத்தும் 100 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களில் குறைந்தபட்சம் ஒரு மோசடி குறுஞ்செய்தியாவது அனுப்பப்பட்டிருக்கிறது.
வேலைவாய்ப்பு, வங்கித் தகவல், கடன், லாட்டரி என பல அவதாரங்களில் மோசடி குறுஞ்செய்திகள் பயனர்களின் மொபைல்போனை வந்தடைகின்றன.
இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள AI தொழில்நுட்பத்துடன் கூடிய மோசடி தடுப்பு வசதியை தங்கள் செயலியில் அறிமுகப்படுத்தியிருக்கிறது ட்ரூகாலர் நிறுவனம்.
ஆன்லைன் மோசடி
எப்படி செயல்படுகிறது இந்த வசதி?
மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காணமுடியாதவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.
பயனர்களுக்கு குறுஞ்செய்தி வரும் போதே, அதனை அடையாளம் கானும் அந்நிறுவனத்தின் AI தொழில்நுட்பம். அது மோசடி குறுஞ்செய்திகளை அடையாளம் காணும் பட்சத்தில், 'இது மோசடி செய்வதற்காக அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி. இதில் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம்' என எச்சரிக்கை செய்யும்.
மேலும், அந்தக் குறுஞ்செய்தியில் லிங்க்குகள் ஏதாவது அனுப்பப்பட்டிருந்தால், அந்த லிங்க்குகளையும் பயன்படுத்த முடியாத வகையில் செயலிழக்கச் செய்யும்.
ஒருவேளை அது மோசடியாக இல்லாமல், நமக்கு தெரிந்தவர்கள் அனுப்பிய குறுஞ்செய்தி தான் எனில், மேனுவலாக அதனை பாதுகாப்பான தொடர்பு தான் என மார்க் செய்து விட்டு அதில் இருக்கும் லிங்க்குகளை நம்மால் பயன்படுத்தமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.