
டிக் டாக் மொபைல் ஆப்பிற்கு இந்தியாவில் மீண்டும் அனுமதியா? வலைதளத்தை அணுக முடிவதாக தகவல்
செய்தி முன்னோட்டம்
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட சீன வீடியோ செயலியான டிக் டாக், இந்தியாவிற்கு மீண்டும் திரும்பலாம் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. சில பயனர்களுக்கு டிக் டாக் செயலியின் இணையதளம் அணுகும்படியாக இருப்பதால், இந்த யூகங்கள் வலுப்பெற்றுள்ளன. இருப்பினும், மொபைல் ஆப் இன்னும் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர்களில் கிடைக்கவில்லை. டிக் டாக் அல்லது அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance) இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால், இணையதளம் அணுகும்படியாக இருப்பது, ஒருவேளை படிப்படியாக டிக் டாக் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்ற ஊகங்களுக்கு வழிவகுக்கிறது. எனினும், சில பயனர்கள் இன்னும் இணையதளத்தை அணுக முடியவில்லை என்றும், சில பக்கங்கள் திறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
தடை
சீன மொபைல் ஆப்ஸ்களுக்கு தடை
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2020 ஜூன் மாதம், இந்திய இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறி, மத்திய அரசு டிக் டாக் உட்பட 59 சீன மொபைல் ஆப்ஸ்களுக்குத் தடை விதித்தது. கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய-சீன வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தத் தடை, டிக் டாக்கின் தாய் நிறுவனமான பைட் டான்ஸிற்கு ஒரு பெரிய பின்னடைவாக அமைந்தது. தற்போது, இரு நாடுகளுக்கு இடையிலான புவிசார் அரசியல் சூழல் மேம்பட்டுள்ளது. எல்லைப் பதட்டங்களைக் குறைக்க இரு நாடுகளுக்கும் இடையே பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. இந்த சூழலில், டிக் டாக் மீண்டும் இந்தியாவுக்கு திரும்புமா என்ற கேள்வி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.