இன்று இரவு தோன்றவிருக்கும் 'சூப்பர் மூன்'-ல் என்ன ஸ்பெஷல்?
பூமிக்கு அருகே இந்த ஆண்டு தோன்றவிருக்கும் நான்கு 'சூப்பர் மூன்'களில் (Super Moon) முதல் சூப்பர் மூன் இன்று இரவு தோன்றவிருக்கிறது. முதலில் சூப்பர் மூன் என்றால் என்ன? வழக்கமாக ஒவ்வொரு மாதமும் ஒரு பௌர்ணமி நாளில், நம்முடைய நிலவு முழுநிலவாகக் காட்சி தரும். சாதாரணமாக பௌர்ணமி நாளில் தோன்றும் நிலவை விட சற்று பெரிதாவும், அதிக வெளிச்சத்துடனும் தோன்றும் முழுநிலவையே 'சூப்பர் மூன்' எனக் குறிப்பிடுகிறார்கள். குறிப்பிட்ட பௌர்ணமி நாளில், நிலவானது மற்ற நாட்களை விட பூமிக்கு கொஞ்சம் அருகில் இருப்பதால் அளவில் பெரியதாகவும், அதிக வெளிச்சத்துடனும் தோன்றுகிறது. இன்று இரவு தோன்றவிருக்கும் முழுநிலவானது சாதாரண பௌர்ணமி நாட்களில் தோன்றுவதை விட 16% பெரிதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தோன்றவிருக்கும் அடுத்த சூப்பர் மூன்கள்:
சாதாரண பௌர்ணமி நாட்களில் நிலவுக்கும், பூமிக்கும் இடையேயான தூரம் 3.84 லட்சம் கிலோமீட்டர்களாக இருக்கும். ஆனால், இன்றைய தினம் 3.61 லட்சம் கிலோமீட்டர்கள் தான். அதாவது, இன்றைக்கு தோன்றும் நிலவானது 22,539 கிலோமீட்டர்கள் குறைவான தூரத்தில் தோன்றவிருக்கிறது. இன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, தென்கிழக்கு அடிவானத்தில் சூப்பர் மூன் தோன்றவிருக்கிறது. மேலும், இன்று அஸ்தமனத்திற்குப் பிறகு மேற்கு அடிவானத்தில், 11 டிகிரியில் வீனஸ் கோளையும், 14 டிகிரியில் செவ்வாய் கோளையும் காண முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இன்றைய சூப்பர் மூனைத் தொடர்ந்து இந்த ஆண்டு, ஆகஸ்ட் 1, ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 28 ஆகிய தேதிகளிலும் சூப்பர் மூனை நாம் பார்க்க முடியும்.