இந்தியாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போனாக வெளியானது 'டெக்னோ ஸ்பார்க் கோ (2024)'
இந்தியாவில் தங்களுடைய ஸ்பார்க் சீரிஸின் கீழ் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டிருக்கிறது சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான டெக்னோ (Tecno). 'டெக்னோ ஸ்பார்க் கோ (2024)' என்ற ஸ்மார்ட்போனை, 2023 மாடலின் அப்டேட்டட் வெர்ஷனாக வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். மேலும், இந்தியாவில் விற்பனையாகி வரும் டெக்னோ போன்களிலேயே மிகவும் விலை குறைந்த ஸ்மார்ட்போனாகவும் வெளியாகியிருக்கிறது இந்த ஸ்பார்க் கோ (2024). ஆப்பிள் ஐபோன்களில் கொடுக்கப்பட்டிருக்கும் டைனமிக் ஐலாண்டு போன்ற வசதியுடன், வெளித்தோற்றமும் கிட்டத்தட்ட ஆப்பிளின் டிசனை ஒத்திருக்கும் வகையிலேயே புதிய ஸ்பார்க் கோ (2024) வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 3GB/64GB, 8GB/64GB, 8GB/128GB என மூன்று வேரியன்ட்களாக வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய ஸ்மார்ட்போன். இவற்றில் அடிப்படை வேரியன்டின் விலையை மட்டுமே டெக்னோ தற்போது அறிவித்திருக்கிறது.
டெக்னோ ஸ்பார்க் கோ (2024): வசதிகள் மற்றும் விலை
90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.56-இன்ச் LCD திரை, பக்கவாட்டு ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்கள், யுனிசாக் T606 ப்ராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷனை அடிப்படையாகக் கொண்ட HiOS 13 இயங்குதளம் ஆகிய வசதிகளைப் பெற்றிருக்கிறது இந்த ஸ்பார்க் கோ (2024). பின்பக்கம் 13MP முதன்மை கேமரா மற்றும் கூடுதல் AI லென்ஸ் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்பக்கம் 8MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், 10W சார்ஜிங் வசதியுடன் கூடிய 5,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. 3GB/64GB அடிப்படை வேரியன்டானது, ரூ.6,699 விலையில் வெளியாகியிருக்கிறது. டிசம்பர் 7ம் தேதி முதல் அமேசான் ஆன்லைன் தளம் மற்றும் பிற சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படவிருக்கிறது இந்தப் புதிய ஸ்பார்க் கோ (2024).