உலகின் பல பகுதிகளிலும் ஸ்பாட்டிஃபை சேவைகள் திடீர் முடக்கம்; காரணம் என்ன?
மியூசிக் ஸ்ட்ரீமிங் தளமான ஸ்பாட்டிஃபை தற்காலிக செயலிழப்பை எதிர்கொண்டதால், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 29) இயங்குதளத்தை அணுக முடியாமல் ஆயிரக்கணக்கான பயனர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான பயனர்கள் சேவை இடையூறுகளைப் பற்றிப் புகாரளித்த நிலையில், சிறிது நேரத்திற்குப் பிறகு புகார்கள் சமூக ஊடகங்களிலும் குவியத் தொடங்கின. பல பயனர்கள் தங்களுக்குப் பிடித்த ட்யூன்கள் மற்றும் பாட்காஸ்ட்களை அணுக முடியவில்லை என அதில் பகாரளித்தனர். இணையதள சிக்கல்களைப் புகாரளிப்பதற்குப் பொதுவாக அறியப்படும் ஒரு தளமான downdetector.com இன் படி, 40,000க்கும் மேற்பட்ட மக்கள் ஸ்பாட்டிஃபையில் உள்ள சிக்கல்களைப் பற்றிப் புகாரளித்துள்ளனர்.
செயலிழப்புக்கு ஸ்பாட்டிஃபை பதில்
செயலிழப்பிற்கு பதிலளிக்கும் விதமாக, சிக்கலை ஒப்புக்கொண்டு எக்ஸ் தளத்தில் ஸ்பாட்டிஃபை ஒரு அப்டேட்டைக் கொடுத்துள்ளது. அதில், "சில சிக்கல்களை நாங்கள் இப்போது அறிந்திருக்கிறோம், அவற்றைச் சரிபார்த்து வருகிறோம்!" என ஸ்பாட்டிஃபை தெரிவித்துள்ளது. ஸ்பாட்டிஃபை பயனர்கள் தங்கள் ஒர்க்அவுட் நடைமுறைகள் மற்றும் பிறந்தநாள் விழாக்களுக்கான பிளேலிஸ்ட்கள் உட்பட அவர்களின் அன்றாடத் திட்டங்கள் இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டதாக கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே, ஆரம்ப செயலிழப்பு அறிக்கைகளுக்கு சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நிலைமை மேம்பட்டதாக ஸ்பாட்டிஃபை அறிவித்தது. ஸ்பாட்டிஃபை தளத்தில் இதுபோன்ற செயலிழப்புகள் மிகவும் அரிதானவையாக இருந்து வந்தாலும், பயனர்கள் இதனால் கடும் அவதிக்குள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.