23 புதிய செயற்கைகோள்களை ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 மூலம் விண்ணில் செலுத்திய ஸ்டார்லிங்க்
தன்னுடைய ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்காக ஸ்பேக்ஸ்எக்ஸ் (SpaceX) மூலமாக மேலும் 23 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறார் எலான் மஸ்க். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கனாவரல் ஏவுதளத்திலிருந்து இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு, ஃபாஸ்கன் 9 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்டிருக்கின்றன அந்த செற்கைகோள்கள். விண்ணில் ஏவப்பட்ட 8.5 நிமிடத்திற்குள், ஃபால்கன் 9 ராக்கெட்டின் முதல் நிலையானது மீண்டும் மறுபயன்பாட்டிற்காக வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியிருக்கிறது. ஃபால்கன் 9 ராக்கெட்டின் இந்தக் குறிப்பிட்ட முதல் நிலைக்கு இது வெற்றிகரமான ஆறாவது ஏவல் என்பது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்கின் செயற்கைகோள் வழி இணைய சேவை நிறுவனம்:
ஸ்டார்லிங்க் என்பது உலகமெங்கும் செயற்கைகோள் வழி இணைய சேவை வழங்கும் ஒரு நிறுவனமாகும், ஏற்கனவே அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளில் செயற்கைகோள் வழி இணைய சேவையை வழங்கி வருகிறது இந்நிறுவனம். இந்தியாவிலும் செயற்கைகோள் வழி இணைய சேவை வழங்க ஸ்டார்லிங்க் திட்டமிட்டு வருகிறது. தற்போது பூமியைச் சுற்றி இந்நிறுவனத்தின் 5,000-க்கும் மேற்பட்ட செயற்கைகோற்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. விண்வெளியில் பூமியைச் சுற்றும் சுற்றுவட்டப் பாதையில் 12,000 செயற்கை கோள்கள் வரை நிலைநிறுத்த அனுமதி பெற்றிருக்கிறது ஸ்டார்லிங்க். பூமியின் குறைந்த உயரச் சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கை கோள்களை நிலைநிறுத்த, அதன் மூலம் இணைய இணைப்பு இல்லாத இடங்களிலும் இணைய சேவை வழங்கும் திட்டத்தைக் கொண்டிருக்கிறது ஸ்டார்லிங்க்.