போலி உள்ளடக்க பிரச்சினைக்கு சோனி நிறுவனம் வழங்கும் தீர்வு
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியால் நிஜம் போலவே காணப்படும் போலி புகைப்படங்கள் மற்றும் காணொளிகளின் பரவல் அதிகமாகி வருகிறது. இந்தப் பிரச்சினையைத் தடுக்க அல்லது எதிர்கொள்ள பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களால் ஆன பல்வேறு தீர்வுகளை முன்வைத்து வருகின்றன. அந்த வரிசையில் சோனியும், டிஜிட்டல் கையொப்பமிட்ட புகைப்பட உருவாக்க முறை கடந்த ஆண்டு தங்களுடைய கேமாரக்களில் அறிமுகப்படுத்தியது. அதாவது சோனி அறிமுகப்படுத்திய அந்தக் குறிப்பிட்ட கேமராக்களின் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் டிஜிட்டல் கையொப்பத்தை அந்தக் கேமரா பதிவு செய்து விடும். அந்தப் புகைப்படத்தை யாராவது எடிட் செய்யும் பட்சத்தில் அது அழிந்து விடும். இதன் மூலம் டிஜிட்டல் கையொப்பம் இடம்பெற்றிருக்கும் புகைப்படங்கள் பிறரால் எடிட் செய்யப்படாத உண்மையான புகைப்படம் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.
டிஜிட்டல் கையொப்ப தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட்போன்கள்:
கேமராவில் அறிமுகப்படுத்தப்பட்ட அந்தத் தொழில்நுட்பத்தை ஸ்மார்ட்போன்களிலும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது சோனி நிறுவனம். அதன்படி, அடுத்து அந்நிறுவனம் வெளியிடவிருக்கும் எக்ஸ்பீரியா 1 VI மற்றும் எக்ஸ்பீரியா 5 VI ஸ்மார்ட்போன்களானது இந்த டிஜிட்டல் கையொப்ப தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் மூலம், அந்த மொபைல்களில் எடுக்கப்படும் புகைப்படங்களின் உண்மைத் தன்மையை அதன் டிஜிட்டல் கையொப்பத்தைக் கொண்டு நாம் தெரிந்து கொள்ள முடியும். இதே போன்ற தொழில்நுட்பங்களை அனைத்து மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனங்களும் பயன்படுத்தும் பட்சத்தில், வருங்காலத்தில் இந்த டிஜிட்டல் கையொப்ப முறையை உண்மையான புகைப்படங்களுக்கான தரச்சான்றாகக் கூடப் பயன்படுத்த முடியும். சோனியின் எதிர்வரும் ஸ்மார்ட்போனில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மட்டுமல்லாது காணொளிகளிலும் இந்த டிஜிட்டல் கையொப்பம் இடம்பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.