பேரண்ட விரிவாக்கத்தில் விஞ்ஞானிகளிடையே நீடிக்கும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியாலும் தீர்க்க முடியாத குழப்பம்!
நாம் வாழும் இந்தப் பேரண்டமானது ஒவ்வொரு நொடியும் விரிவடைந்து கொண்டே தான் இருக்கிறது என்பது நமக்குத் தெரியும். அது எந்த வேகத்தில் விரிவடைகிறது என்பதையும் விண்வெளி ஆய்வாளர்கள் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். இந்தக் கணக்கீட்டை, 1990ம் ஆண்டு நாசா விண்வெளியில் நிலைநிறுத்திய ஹபுள் தொலைநோக்கி சேகரித்த தகவல்களைக் கொண்டே செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஹபுள் தொலைநோக்கி சேகரித்த தகவல்களின் மூலம் செய்யப்பட்ட கண்கீடு சரிதான் என்பதனை, கடந்த 2021ம் ஆண்டு விண்வெளியில் நிலைநிறுத்திய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியினைக் கொண்டும் சரிபார்த்திருக்கிறார்கள். எல்லாம் சரிதான். ஆனால், ஹபுள் தொலோநோக்கியைக் கொண்டு செய்யப்பட்ட கணக்கீடுகளிலேயே விஞ்ஞானிகளுக்குச் சில குழப்பங்கள் எழுந்தது. அதனை ஜேப்ஸ் வெப் தொலைநோக்கியைப் பயன்படுத்திய போது தீர்வு காண முடியுமா எனத் தெரிவில்லை?
பேரண்ட விரிவாக்கக் கணக்கீடு:
நமது பேரண்டம் எந்த வேகத்தில் விரிவடைகிறது என்பதைக் கணக்கிட ஹபுள் தொலைநோக்கியைக் கொண்டு இரு விதமான தகவல்களைச் சேகரித்து இரண்டு விதமான செயல்முறைகளைப் பின்பற்றியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள். முதலாவது, இந்தப் பேரண்டம் உருவான போதோ அல்லது பேரண்டம் உருவாகி சில காலம் கழித்தோ உருவாகியிருக்கும், அதாவது மிகப் பழமையான 'உறைந்த அக்கௌஸ்டிக் அலைகள்' போன்ற விண்வெளிப் பொருட்களை ஆய்வு செய்வதன் மூலம் பேரண்ட விரிவாக்க வேகத்தை கணக்கிடுவது. இரண்டாவது, தொலைதூரத்தில் உள்ள உள்ளார்ந்த வெளிச்சத்தை உமிழும் விண்வெளிப் பொருட்களுக்கிடையேயான தூரத்தை அளவிடுவதன் மூலம் பேரண்ட விரிவாக்க வேகத்தை அளவிடுவது.
பேரண்ட விரிவாக்கக் கணக்கீட்டு முறையில் என்ன குழப்பம்?
மேற்கூறிய இரு செயல்முறைகளில், முதல் செயல்முறையைப் பின்பற்றிய கணக்கீட்டு முறையில் இந்தப் பேரண்டமானது ஒரு மெகாபார்செக்கிற்கு வினாடிக்கு 67 கிமீ வேகத்தில் விரிவடைவதாக முடிவுகள் கிடைத்திருக்கிறது. இரண்டாவது செயல்முறையைப் பின்பற்றிய கணக்கீட்டு முறையில், இந்தப் பேரண்டமானது ஒரு மெகாபார்செக்கிற்கு வினாடிக்கு 73-74 கிமீ வேகத்தில் விரிவடைவதாக முடிவுகள் கிடைத்திருக்கின்றன. எந்த வேகத்தில் பேரண்டம் விரிவடைகிறது என்பதை ஹபுள் கான்ஸ்டன்ட் எனக் குறிப்பிடுகிறார்கள். ஆனால், இரண்டு ஹபுள் கான்ஸ்டன்ட் முடிவுகள் கிடைத்திருப்பதால், இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை ஹபுள் டென்ஷன் எனக் குறிப்பிடுகிறார்கள். முன்னர் ஹபுள் தொலைநோக்கியைப் பயன்படுத்தி போது, அதன் பக்க-அகச்சிவப்பு அலைநீளத் தகவல்கள் அவ்வளவு துல்லியமாக இல்லை. இந்தப் பக்க-அகச்சிவப்பு அலைநீளத்தைப் பயன்படுத்தியே தூரத்தில் உள்ள விண்வெளிப் பொருட்களின் தூரத்தை அளவிட்டது ஹபுள்.
ஜேம்ஸ் வெப்பாலும் தீர்க்க முடியாத சிக்கல்:
ஜேப்ஸ் வெப் தொலோநோக்கியானது பக்க-அகச்சிவப்பு மற்றும் இடை-அகச்சிவப்பு அலைநீளங்களை அளவிடுவதற்கான மேம்பட்ட கருவிகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எனவே, ஹபுள் தொலைநோக்கியைக் கொண்டு சேகரிக்கப்பட்ட தகவல்களைப் போலவே, மேம்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியைக் கொண்டு மீண்டும் ஒரு முறை அதே தகவல்களைச் சேகரித்திருக்கிறார்கள். ஆனால், தற்போதும் ஹபுள் டென்ஷனுக்கு இடையிலான முடிவுகளில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அப்படியென்றால் முன்பு ஹபுள் தொலைநோக்கியின் மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்களைக் சரியாக இருக்கிறதென்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். எனினும், ஹபுள் டென்ஷனுக்கான விடை இன்னும் விஞ்ஞானிகளுக்குக் கிடைக்கவில்லை. பேரண்டத்தில் விரவாக்கத்தில், நாம் இன்னும் புரிந்து கொள்ளாத இருண்ட ஆற்றலும் ஒரு பெரும்பங்கு வகிக்கலாம் எனவும், அதுவே ஹபுள் டென்ஷனுக்கான காரணமாக இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
Twitter Post
#NASAWebb has set its sights on solving the mystery of the Hubble constant, and initial data seems to confirm what astronomers suspected for decades: https://t.co/apVxOsxKtl Credit: NASA, ESA, CSA, and A. Riess (STScI). Image Processing: A. Pagan (STScI). pic.twitter.com/PGEc3zjcSj— Space Telescope Science Institute (@SpaceTelescope) September 12, 2023