புதிய கேலக்ஸி F34 ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது சாம்சங்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான், தங்களுடைய ஃப்ளாக்ஷிப் ஃபோல்டு மற்றும் ஃப்ளிப் ஸ்மார்ட்போன்களை கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வின் மூலம் அறிமுகப்படுத்தியது சாம்சங். அதனைத் தொடர்ந்து, தற்போது புதிய 'கேலக்ஸி F34' என்ற மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது புதிய F34? 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் அதிகபட்ச வெளிச்சம் கொண்ட 6.4 இன்ச் Super AMOLED டிஸ்பிளேவைப் பெற்றிருக்கிறது புதிய F34. ஸ்கிரீன் பாதுகாப்பிற்காக கொரில்லா கிளாஸ் 5 பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்துடன் வெளியாகியிருக்கும் இந்த F34-க்கு நான்கு வருட இயங்குதள அப்டேட்டும், ஐந்து வருட செக்யூரிட்டி அப்டேட்டும் வழங்கப்படும் என உறுதியளித்திருக்கிறது சாம்சங்.
சாம்சங் கேலக்ஸி F34: ப்ராசஸர் மற்றும் விலை
இந்த புதிய ஸ்மார்ட்போனுக்கு தங்களுடைய சொந்த எக்ஸினோஸ் 1280 ப்ராசஸரையே பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். பின்பக்கம் 50MP+8MP+2MP ட்ரிபிள் கேமரா செட்டப்பும், முன்பக்கம் 13MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்துடன் பெரிய 6,000 mAh பேட்டரியையும் கொடுத்திருக்கிறது சாம்சங். இதன் அடிப்படை 6GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டை, ரூ.18,999 விலையிலும், டாப் எண்டான 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்டை ரூ.20,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது சாம்சங். ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதன் முன்பதிவு தற்போது தொடங்கியிருக்கும் நிலையில், ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளைப் பயன்படுத்தி இதனை வாங்குபவர்களுக்கு ரூ.1,000 உடனடித் தள்ளுபடியும் கிடைக்கிறது.