இதயத்துடிப்பை கண்காணிக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியது சாம்சங்
சீரற்ற இதயத்துடிப்பைக் கண்காணித்து பயனருக்கு தெரியப்படுத்தும் வகையிலான புதிய வசதியை தங்களுடைய உடல் நலக் கண்காணிப்பு செயலியில் வழங்கவிருக்கிறது சாம்சங். உலகம் முழுவதும் இதயக் கோளாறுகள் காரணமாக உயரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. எனவே, தங்கள் பயனர்கள் தங்களின் இதயத்தின் ஆரோக்கியம் குறித்து தெரிந்து கொள்வதற்கா இந்த வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறோம் எனத் தெரிவித்திருக்கிறார், அந்நிறுவனத்தின் டிஜிட்டல் உடல்நலப் பிரிவின் துணைத்தலைவர் ஹான் பாக். இந்த வசதியானது, ஏற்கனவே அந்நிறுவனத்தின் செயலியில் வழங்கப்பட்டிருக்கும் எலெக்ட்ரோ கார்டியோகிராம் மானிட்டரிங் வசதியுடன் சேர்ந்து செயல்படும் போது, இதயம் குறித்த பிரச்சினைகளை உடனடியாக அறிந்து கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எப்போது அறிமுகம்?
இந்தப் புதிய வசதியை இந்தாண்டு வெளியாகும் தங்களுடைய கேலக்ஸி வாட்சில் முதலில் வழங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது சாம்சங். அதனைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் முந்தைய வாட்ச்களில் இந்த புதிய வசதியானது அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக மற்றும் கொரியாவின் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு துறை ஆகியவற்றிடம் இந்தப் புதிய வசதிக்கான அனுமதியை சாம்சங் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வசதியை தற்போது அமெரிக்கா, கொரியா, அர்ஜென்டினா, இந்தோனேஷியா, பனாமா, கௌதமாலா, ஜார்ஜியா மற்றும் ஹாங்காங் உட்பட உலகின் 13 நாடுகளில் முதலில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருக்கிறது சாம்சங்.