Page Loader
நவம்பர் 9-ல் அறிமுகமாகிறது ஸ்மார்ட்போனுக்கு மாற்று எனக் கூறப்படும் புதிய 'AI பின்' சாதனம்
நவம்பர் 9-ல் அறிமுகமாகிறது ஸ்மார்ட்போனுக்கு மாற்று எனக் கூறப்படும் புதிய 'AI பின்' சாதனம்

நவம்பர் 9-ல் அறிமுகமாகிறது ஸ்மார்ட்போனுக்கு மாற்று எனக் கூறப்படும் புதிய 'AI பின்' சாதனம்

எழுதியவர் Prasanna Venkatesh
Nov 06, 2023
04:52 pm

செய்தி முன்னோட்டம்

ஆப்பிள் நிர்வாகிகள் இருவரால் துவக்கப்பட்டு, ஓபன் ஏஐ-யின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேனின் ஆதரவு பெற்ற ஹ்யூமேன் (Humane) நிறுவனம், தங்களுடைய முதல் கேட்ஜெட்டான 'AI பின்'னை வரும் நவம்பர் 9-ம் தேதியன்று அறிமுகப்படுத்தவிருக்கிறது. இந்த சாதனத்தை சமீபத்தில் நடைபெற்ற பாரிஸ் பேஷன் நிகழ்விலும் காட்சிப்படுத்தியிருந்தது ஹ்யூமேன். நம்முடைய உடையில் காந்தத்தின் உதவியுடன் ஒட்டிக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த சாதனத்தை ஸ்மார்ட்போனுக்கு மாற்றாகக் கூடப் பயன்படுத்த முடியும் எனக் கூறுகின்றனர். ஸ்கிரீன் இல்லாமல், தனித்து இயங்கும் வகையில், செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்டு மென்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த 'AI பின்' சாதனம்.

தொழில்நுட்பம்

ஹ்யூமேன் AI பின்: வசதிகள்

ஸ்கிரீன் எதுவும் இல்லை என்பதால், இதனை நம்முடைய குரலைக் கொண்டு தான் இயக்க வேண்டும். ஆம், இந்த சாதனத்தின் மூற்றிலுமாக குரல் வழிப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் ப்ராசஸரைக் கொண்டிருக்கும் AI பின்னில், ஒரு கேமரா, ஒரு ஸ்பீக்கர் மற்றும் ஒரு மினி ப்ரொஜெக்டர் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட்போன் போன்ற பயன்பாடு வேண்டும் பொழுது, இதன் மினி ப்ரொஜெக்டரிலிருந்து ஸ்மார்ட்போன் இன்டர்பேஸ் ஒன்று எதிரில் இருக்கும் பொருளின் மீது காட்டும். அதனைக் கொண்டு ஸ்மார்ட்போன் போலவும் இதனைப் பயன்படுத்த முடியும் எனக் கூறியிருக்கிறது அந்நிறுவனம்.

கேட்ஜட்ஸ்

2023ன் சிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்று: 

இன்னும் சந்தையில் அறிமுகப்படுத்தப்படாத இந்த புதிய AI பின்னை 2023ம் ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்புகளுள் ஒன்றாகத் தேர்வு செய்திருக்கிறது டைம் ஆங்கில இதழ். இதன் கேமரா மற்றும் மைக்ரேபோன் பயன்பாட்டைச் சுட்டிக்காட்டி பலரும் தனியுரிமை பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால், தனியுரிமைக்கு பாதுகாப்பிற்கு எந்தவொரு ஆபத்தும் இல்லாத வகையிலேயே இந்த சாதனத்தை உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது ஹ்யூமேன். 'ஸ்மார்ட்போனுக்கு மாற்றா?' என்ற கேள்வியுடன் வரும் நவம்பர் 9ம் தேதி அறிமுகமாகவிருக்கிறது இந்த புதிய AI பின் சாதனம். வெளியீட்டின் போது இந்த சாதனம் குறித்த முழுமையான அனைத்து தகவல்களையும் வழங்கவிருக்கிறது ஹ்யூமேன்.