Page Loader
மார்வெல் சூப்பர் ஹீரோ அயர்ன் மேன் போல் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர்; மருத்துவ உலகில் புதிய சாதனை
அயர்ன் மேன் போல் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர்

மார்வெல் சூப்பர் ஹீரோ அயர்ன் மேன் போல் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர்; மருத்துவ உலகில் புதிய சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 03, 2024
05:09 pm

செய்தி முன்னோட்டம்

பல்லேடியம் மூலம் இயங்கும் ஆர்க் ரியாக்டர் மார்வெல் சூப்பர் ஹீரோ அயர்ன் மேனை உயிருடன் வைத்திருப்பது போல, அமெரிக்காவில் 58 வயது நபர் ஒருவர் டைட்டானியம் மூலம் உருவாக்கப்பட்ட செயற்கை இதயம் பொருத்தப்பட்டு உயிர் வாழ்ந்துள்ளார். இதன் மூலம் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட முதல் நபர் என்ற சாதனையை அந்த அமெரிக்கர் படைத்துள்ள நிலையில், இது மருத்துவ உலகில் புதிய புரட்சிக்கு வித்திட்டுள்ளது. மருத்துவ தொழில்நுட்ப நிறுவனமான BiVACOR உருவாக்கிய இந்த சாதனம், செயலிழக்கும் மனித இதயத்தின் செயல்பாட்டை முழுமையாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட டைட்டானியம் இரத்த-பம்பர் (TAH) ஆகும். BiVACOR செயற்கை இதயம் (TAH) பாரம்பரிய செயற்கை இதய வடிவமைப்புகளிலிருந்து குறிப்பிடத்தக்க மாறுபாட்டைக் கொண்டுள்ளது.

TAH செயல்பாடு

TAH செயற்கை இதயத்தின் சிறப்பம்சங்கள்

இதற்கு முன்னர் உருவாக்கப்பட்ட செயற்கை இதயங்களைப் போலன்றி, TAH இயற்கையான இதயத் துடிப்பைப் பிரதிபலிக்காது. அதற்கு பதிலாக, இது நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பகுதிகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்ய ஒற்றை, காந்த லெவிட்டிங் ரோட்டரைப் பயன்படுத்துகிறது. டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் உள்ள பேய்லர் செயின்ட் லூக்கின் மருத்துவ மையத்தில் இதற்கான சோதனை நடந்தது. இறுதி நிலை இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இந்த சாதனம் பொருத்தப்பட்டது. அவருக்கு இதய தானம் கிடைத்து வேறொருவரின் இதயம் பொருத்தும் வரை எட்டு நாட்கள் இது திறம்பட செயல்பட்டது. உலகளவில் ஆண்டுதோறும் 6,000 இதய மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படும் நிலையில், மாற்று இதய அறுவை சிகிச்சையில், இது எதிர்காலத்தில் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.