கூகுள் கிளவுடிற்கு போட்டியாக கிளவுட் கம்ப்யூட்டிங் பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்துகிறது ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 2025 ஆம் ஆண்டில் ஒரு வகையான கிளவுட் பிளாட்ஃபார்மை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. இதுவரை எந்தவொரு பெரிய உலகளாவிய ரிசர்வ் வங்கிக்கும் முதல் முயற்சியாக இது உள்ள நிலையில், இதற்காக உள்ளூர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஆர்பிஐ பயன்படுத்த உள்ளது. இந்த நடவடிக்கையானது சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களான அமேசான் வெப் சர்வீசஸ் (AWS), மைக்ரோசாப்ட் அசூர், கூகுள் கிளவுட் மற்றும் ஐபிஎம் கிளவுட் போன்றவற்றுக்கு எதிராக போட்டியிடும் வகையில் ஆர்பிஐ இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் இந்த திட்டத்தை முதலில் அறிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் கிளவுட் தளம்: நிதி நிறுவனங்களுக்கான தீர்வு
ரிசர்வ் வங்கியின் கிளவுட் பிளாட்ஃபார்ம் நிதி நிறுவனங்களுக்கு மலிவு விலையில் உள்ளூர் தரவு சேமிப்பை வழங்கும். பைலட் திட்டம் 2025 இல் தொடங்கப்படும் என்று திட்டத்துடன் நன்கு அறிந்த இரண்டு பெயர் வெளியிட விரும்பாத ஆதாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. அடுத்த சில மாதங்களில் சிறிய அளவில் செயல்படுத்தத் தொடங்க விரும்புகிறோம் என்று திட்டத்தில் ஈடுபட்டுள்ள மூத்த நிர்வாகி ஒருவர் கூறினார். இந்தச் சேவையானது, தற்போதுள்ள சலுகைகளை பட்ஜெட் காரணமாக பயன்படுத்த முடியாத சிறிய வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களுக்காக இதை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்படும்
ஆர்பிஐயின் கிளவுட் சேவை அடுத்த சில ஆண்டுகளில் படிப்படியாக விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதல் கட்டத்தை ஆர்பிஐயின் ஆராய்ச்சி பிரிவான இந்திய நிதி தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகள் (IFTAS) உருவாக்குகிறது. அடுத்தடுத்த கட்டங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தனியார் துறை தொழில்நுட்ப நிறுவனங்களின் பங்கேற்புடன் உருவாக்கப்பட உள்ளது. EY என்ற ஆலோசனை நிறுவனமும் இந்த திட்டத்திற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் கிளவுட் திட்டத்திற்கான முதல் தவணை நிதியானது ஆர்பிஐயின் சொத்து மேம்பாட்டு நிதியான 2.72 பில்லியன் டாலர்களில் இருந்து பெறப்படும். அடுத்த கட்டங்களில், திட்டத்தில் பங்குகளை வைத்திருக்க நிதி நிறுவனங்கள் அழைக்கப்படும்.
உள்ளூர் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அழைப்பு
இந்த நடவடிக்கையானது, உலகளாவிய நிதித் துறையில் இந்தியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்தி, பணம் செலுத்துதல் மற்றும் நிதித் தரவுகளின் உள்ளூர்மயமாக்கலுக்கான ஆர்பிஐயின் உந்துதலின் ஒரு பகுதியாகும். கிளவுட் கம்ப்யூட்டிங் தொடர்பான தீர்வுகளை உருவாக்குவதில் அனுபவமுள்ள இந்தியாவுடன் இணைந்த நிறுவனங்களை மட்டுமே திட்டத்திற்கான ஏலத்திற்கு ஆர்பிஐ அழைத்துள்ளது. கடந்த மாதம் IFTAS இணையதளத்தில் வெளியிடப்பட்ட கொள்முதல் ஆவணத்தில் இது தெரியவந்துள்ளது. நிறுவனங்கள் தனித்தனியாகவோ அல்லது கூட்டமைப்பாகவோ விண்ணப்பிக்கலாம். மேலும், மும்பை மற்றும் ஹைதராபாத்தில் தரவு மைய வசதிகளை அமைக்க வேண்டும். "கணிசமான எண்ணிக்கையிலான ஐடி நிறுவனங்கள் மற்றும் இந்திய கிளவுட் சேவை நிறுவனங்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன." என்று அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.