டெலிகிராம் மூலம் மோசடி.. ரூ.8.56 லட்சத்தை இழந்த புனேவைச் சேர்ந்த நபர்!
செய்தி முன்னோட்டம்
ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை எனக் கூறி புனேவைச் சேர்ந்த நபர் ஒருவரை ஏமாற்றி ரூ.8.56 லட்சத்தை மோசடி செய்திருக்கிறார் ஆன்லைன் மோசடி நபர்.
45 வயதான புனேவைச் சேர்ந்த நிலேஷ் மோகன்லால் பாங்கிரேசா என்பவர் டெலிகிராம் மூலமாக பஞ்சாப் மற்றும் டெல்லியைச் சேர்ந்த நான்கு பேர் தன்னைத் தொடர்பு கொண்டு மோசடி செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
முதலில் பதிவுக் கட்டணத்தைச் செலுத்தக் கூறியிருக்கின்றனர். பின்னர் ஆன்லைனில் ரிவ்யூ பதிவிடுவது, விளம்பரத்தைக் கிளிக் செய்வது, படிவங்களைப் பூர்த்தி செய்வது ஆகிய செயல்களை பகுதி நேர வேலை எனக்கூறி அறிமுகம் செய்திருக்கின்றனர்.
இந்த வேலைகளுக்கான தொகையையும், பதிவுக் கட்டணத்தையும் திரும்பச் செலுத்திவிடுவோம் என அவர்கள் வாக்குறுதி அளித்து தொடர்ந்து நிலேஷிடம் இருந்து பணம் பெற்றிருக்கின்றனர்.
ஆன்லைன் மோசடி
டெலிகிராம் மூலம் மோசடி:
கிட்டத்தட்ட ரூ.8.56 லட்சத்தை அவர்களிடம் இழந்த பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார் நிலேஷ்.
புனேயில் இதே போன்று மென்பொருள் பொறியாளர் ஒருவரை ஏமாற்றி ரூ.7.5 லட்சம் வரை ஆன்லைன் மோசடி நபர்கள் ஏமாற்றிய சம்பவம் கடந்த மாதம் நடைபெற்றது.
ஆன்லைன் மூலம் மோசடி செய்ய பல வழிகளிலும் மோசடி நபர்கள் முயற்சி செய்து வருகின்றனர். ஆன்லைன் பயனர்கள் இது போன்ற நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றே வருகிறது.
யாரென்று தெரியாத நபர்களிடம் ஆன்லைன் மூலம் பழகி பணத்தை பயனர்கள் அனுப்பாமல் இருந்தாலே இது போன்ற மோசடி சம்பவங்களில் இருந்து தப்பிவிடலாம், ஆன்லைன் பயனர்களே உஷார்.