நிதி சேவைகளை மேம்படுத்த ஏஐ ஸ்டார்ட்அப் பெர்ப்ளெக்ஸிட்டியுடன் கூட்டு சேர்ந்தது பேடிஎம்
செய்தி முன்னோட்டம்
இந்திய ஃபின்டெக் நிறுவனமான பேடிஎம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஸ்டார்ட்அப் நிறுவனமான பெர்ப்ளெக்ஸிட்டியுடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்துள்ளது.
இந்த இணைவு மூலம், பேடிஎம் தளத்தில் இனி ஏஐ தேடல் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஒத்துழைப்பு இந்தியா முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்களுக்கு நிதி கல்வியறிவு மற்றும் அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம், பேடிஎம் பயனர்கள் கேள்விகளைக் கேட்கவும், அவர்களின் உள்ளூர் மொழியில் நிதி சார்ந்த தகவல்களை ஆராயவும், மேலும் நிதி முடிவுகளை எடுக்கவும் முடியும்.
ஏஐ மூலம் இயங்கும் இந்த தேடும் அம்சம், ஒருங்கிணைப்பு, நிதி சேவைகளை எளிமைப்படுத்துதல் மற்றும் பயனர் அனுபவத்தை மேம்படுத்துதல் என்ற பேடிஎம்மின் திட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது.
பேடிஎம்
பேடிஎம்மின் முடிவு குறித்து சிஇஓ விஜய் சேகர் ஷர்மா
பேடிஎம்மின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் ஷர்மா, ஏஐ பயன்பாட்டின் எதிர்காலம் குறித்து பேசினார்.
பெர்ப்ளெக்ஸிட்டி உடனான கூட்டணி இந்திய நுகர்வோர் தகவல்களை எளிதாக அணுக உதவும் என்றும், அதன் மூலம் நிதி விழிப்புணர்வு மற்றும் டிஜிட்டல் ஈடுபாட்டை மேம்படுத்தும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெர்ப்ளெக்ஸிட்டியின் சிஇஓ மற்றும் இணை நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ், ஒத்துழைப்பு குறித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார்.
அவர்களின் ஏஐ தேடல் தொழில்நுட்பம் பயனர்களுக்கு உடணனுக்குடனான, நம்பகமான பதில்களை வழங்கும் என்று கூறினார்.
தொழில்நுட்பம் அன்றாட தொடர்புகள் மற்றும் நிதி சேவைகளை மேம்படுத்தும் ஏஐ மூலம் இயக்கப்படும் டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியாக இந்த ஒத்துழைப்பு இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.