350 கோடி தனிநபர் தரவுகள் இணையத்தில் கசிவு: கடவுச்சொற்கள் மற்றும் அடையாள எண்கள் பாதுகாப்பற்ற நிலையில் கண்டுபிடிப்பு
செய்தி முன்னோட்டம்
பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள் (Passwords), தேசிய அடையாள எண்கள் மற்றும் தனிப்பட்ட ஆவணங்கள் உள்ளிட்ட 350 கோடிக்கும் அதிகமான தரவுப் பதிவுகளைக் கொண்ட இரண்டு பாதுகாப்பற்ற தரவுத்தளங்கள் இணையத்தில் வெளிப்படையாகக் காணப்பட்டிருப்பது உலகளாவிய சைபர் பாதுகாப்பு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வெவ்வேறு இணையப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் எவ்வித கடவுச்சொல்லும் இன்றி இந்தத் தரவுத்தளங்களை அணுகியதன் மூலம், பல நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் ரகசியத் தகவல்கள் கசிந்துள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
மால்வேர்
தகவல் திருடும் மால்வேர் மூலம் கசிந்த 200 கோடி உள்நுழைவுத் தரவுகள்
பிளாக் ஹில்ஸ் இன்பர்மேஷன் செக்யூரிட்டி நிறுவனத்தின் ஆய்வாளர் ஜெரமையா பவுலர் கண்டறிந்த முதல் தரவுத்தளத்தில் சுமார் 200 கோடி உள்நுழைவுத் தரவுகள் இடம்பெற்றிருந்தன.
இதில் மின்னஞ்சல் முகவரிகள், பயனர்பெயர்கள், கடவுச்சொற்கள், குக்கீகள் மற்றும் சாதன விவரங்கள் ஆகியவை 8,471 கோப்புறைகளாக நாடுகள் வாரியாகப் பிரிக்கப்பட்டிருந்தன.
நூறு மில்லியனுக்கும் அதிகமான சமூக வலைதளக் கணக்குகள் மற்றும் மின்வணிகக் கணக்குகளின் விவரங்கள், கணினிகளிலிருந்து ரகசியங்களைத் திருடும் இன்போஸ்டீலர் மால்வேர் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.
மேலும், தனிநபர்களின் முழுமையான டிஜிட்டல் அடையாளத்தைக் கட்டுப்படுத்த உதவும் சுமார் 4 லட்சம் முக்கிய ஆவணங்களும் இதில் இருந்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஹோஸ்டிங் நிறுவனத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு பொது அணுகல் முடக்கப்பட்டுள்ளது.
சீனா
சீனாவுடன் தொடர்புடைய 164 கோடி தரவுப் பதிவுகள் அம்பலம்
அப்கார்ட் சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் ஆய்வு இயக்குநர் கிரெக் பொல்லாக் கண்டறிந்த இரண்டாவது தரவுத்தளத்தில் சுமார் 164 கோடி பதிவுகள் இருந்தன; இவற்றில் பெரும்பாலானவை சீன மக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் தொடர்புடையவை ஆகும்.
இதில் குறைந்தபட்சம் 840 மில்லியன் தனிநபர் தேசிய அடையாள எண்கள், 300 மில்லியன் தொலைபேசி எண்கள், சுமார் 11 மில்லியன் மாணவர் சேர்க்கை விவரங்கள் மற்றும் 8 மில்லியன் வணிகப் பதிவுகள் உள்ளடங்கியிருந்தன.
குழந்தைகள் மற்றும் உயிரிழந்தவர்களின் விவரங்களும் இதில் இடம்பெற்றிருந்த நிலையில், ஆய்வுக்கு இடையே இந்தத் தரவுத்தளம் திடீரென முடக்கப்பட்டது; இது ரான்சம்வேர் தாக்குதலாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
முன்னெச்சரிக்கைகள்
இணையப் பயனர்கள் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்
இந்த 350 கோடி என்ற எண்ணிக்கையில் ஒரே நபரின் பல கணக்குகள் மற்றும் நகல் பதிவுகளும் அடங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தாலும், இணையப் பயனர்கள் உடனடியாகத் தங்களது முக்கிய மின்னஞ்சல், வங்கி மற்றும் சமூக வலைதளக் கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்றுவது அவசியமாகும்.
அத்துடன், இரண்டு அடுக்குப் பாதுகாப்பு முறையை செயல்படுத்துவதன் மூலமும், அங்கீகரிக்கப்படாத மென்பொருள்களை பதிவிறக்குவதைத் தவிர்ப்பதன் மூலமும் இத்தகைய சைபர் அச்சுறுத்தல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.