2023ல் 1.6 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டிய ஓபன்ஏஐ
இந்த 2023ம் ஆண்டில் மட்டும் 1.6 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியிருப்பதாக அறிவித்திருக்கிறது சாம் ஆல்ட்மேன் தலைமையிலான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உருவாக்கத்தில் முன்னணியில் இருக்கும் ஓபன்ஏஐ நிறுவனம். இந்தாண்டு அக்டோபர் மாதம் வரை 1.3 பில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியிருந்ததாக அந்நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கூடுதலாக 300 மில்லியன் டாலர்கள் வருவாய் ஈட்டியிருக்கிறது அந்நிறுவனம். ஓபன்ஏஐ நிறுவனத்தின் பெரும்பகுதி வருவாயானது, அந்நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் AI சாட்பாட்டான சாட்ஜிபிடியின் மூலமே வந்திருக்கிறது. அந்த சாட்பாட்டையே தொடர்ந்து மேம்படுத்தி, உலகளவில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உருவாக்க மற்றும் மேம்பாட்டுப் போட்டியில் முன்னணியில் இருக்கிறது ஓபன்ஏஐ.
100 பில்லியன் டாலர்கள் மதிப்பீடு:
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தின் சிஇஓவான சாம் ஆல்ட்மேன் மற்றும் இயக்குநர் குழுவிற்கிடையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டது. மிகவும் சிக்கலான நேரத்தைத் தொடர்ந்து, நான்கு நாட்களில் நான்கு சிஇஓ-க்களை மாற்றிப் பந்தாடியது அந்நிறுவனம். அந்தப் பிரச்சினைகளைத் தொடர்ந்து, சாம் ஆல்ட்மேன் மீண்டும் பதவியேற்ற பிறகு தற்போது நல்ல செய்தியுடன் வந்திருக்கிறது ஓபன்ஏஐ. இவற்றைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களிடமிருந்து 100 பில்லியன் டாலர்கள் மதிப்பீட்டில் நிதி திரட்ட திட்டமிட்டு வருகிறது ஓபன்ஏஐ. அப்படி ஓபன்ஏஐ நிதி திரட்டும் பட்சத்தில், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸூக்குப் பிறகு மிகவும் மதிப்புமிக்க ஸ்டார்ட்அப் நிறுவனமாக ஓபன்ஏஐ மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.