மனித உருவ ரோபோவைக் களமிறக்கும் ஓபன்ஏஐ: 2027-இல் டெமோ வெளியாகும்; சாம் ஆல்ட்மேன் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஓபன்ஏஐ நிறுவனம், தற்போது வன்பொருள் (ஹார்டுவேர்) மற்றும் ரோபோடிக்ஸ் துறையிலும் நேரடியாகக் களமிறங்குகிறது. இந்நிறுவனம் தனது சொந்த மனித உருவ ரோபோவை (Humanoid Robot) உருவாக்கி வருவதாக அதன் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். சோர்சஸ் பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், மனிதர்கள் வாழும் உலகக் கட்டமைப்பிற்கு மனித உருவ அமைப்பே மிகவும் பொருத்தமானது என விளக்கமளித்துள்ளார்.
காலக்கெடு
2027-இல் முதல் டெமோ மற்றும் காலக்கெடு
ரோபோவின் அறிமுகம் குறித்து பேசிய சாம் ஆல்ட்மேன், "வரும் 2027-ஆம் ஆண்டில் ஓபன்ஏஐ ரோபோவின் சிறந்த செயல்விளக்கக் காட்சியைப் பொதுமக்கள் பார்க்கலாம்" எனக் கூறியுள்ளார்.
இருப்பினும், இத்தகைய ரோபோக்கள் உடனடியாக வீதிகளிலோ அல்லது பொது இடங்களிலோ புழக்கத்திற்கு வராது என்றும், வணிக ரீதியான பயன்பாட்டிற்கு வர இன்னும் சில ஆண்டுகள் பிடிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
முதற்கட்டமாகத் தொழிற்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பணிகளில் நிபுணர்களுக்கு உதவும் வகையிலேயே இவை வடிவமைக்கப்படுகின்றன.
சவால்
உடலை விட மூளையே பிரதான சவால்
ரோபோவின் கைகள், கால்கள் மற்றும் மோட்டார்களை விட, அதைச் சரியான முறையில் சிந்திக்க வைத்து இயக்கும் ஏஐ மூளையை உருவாக்குவதே மிக முக்கியமானதும் கடினமானதுமான பணியாகும் என ஆல்ட்மேன் சுட்டிக்காட்டியுள்ளார்.
கேமராக்கள் மற்றும் சென்சார்கள் மூலம் தரவுகளைப் பெற்று செயல்படும் திறன் கொண்ட ஏஐ மாடல்களை உருவாக்க ஓபன்ஏஐ தீவிரமாகப் பணியாற்றி வருகிறது.
இதற்காக மோஷன் கன்ட்ரோல் மற்றும் வன்பொருள் உற்பத்தி சார்ந்த 27-க்கும் மேற்பட்ட புதிய நிபுணர்களை ஓபன்ஏஐ நிறுவனம் வேலைக்கு அமர்த்தி வருகிறது.
போட்டி
கடும் போட்டியில் சர்வதேச நிறுவனங்கள்
மனித உருவ ரோபோக்கள் துறையில் ஏற்கெனவே டெஸ்லாவின் ஆப்டிமஸ் மற்றும் சீனாவின் எக்ஸ்பெங், யூனிட்ரீ போன்ற நிறுவனங்கள் அதிவேக முன்னேற்றத்தைக் கண்டு வருகின்றன.
இந்த சூழலில், மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் ஓபன்ஏஐ நேரடியாக வன்பொருள் சந்தையில் அடியெடுத்து வைப்பது இத்துறைக்கு இடையே இருக்கும் போட்டியை மேலும் தீவிரமாக்கியுள்ளது.
எதிர்காலத்தில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பிற வன்பொருள் சாதனங்களையும் ஓபன்ஏஐ வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.