புதிய மிட்ரேஞ்சு ஸ்மார்ட்போனை உருவாக்கி வரும் நத்திங்
செய்தி முன்னோட்டம்
கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகளவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டிருக்கிறது, ஒன்பிளஸின் முன்னாள் சிஇஓ தலைமையில் இயங்கி வரும் நத்திங் நிறுவனம்.
நத்திங் போன் (1) மற்றும் நத்திங் போன் (2) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களில் முதலாம் போனை மிட்ரேஞ்சு பிரிவிலும், இரண்டாவது போனை ஃப்ளாக்ஷிப்பாகவும் வெளியிட்டிருந்தது நத்திங்.
இந்நிலையில், இன்னும் கொஞ்சம் விலை குறைவான புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அந்நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், அதன் டிசனை வெளிப்படுத்துவது போலான காணொளி ஒன்றும் தற்போது இணையத்தில் கசிந்திருக்கிறது.
நத்திங்கின் சிறப்பம்சமே, அதன் பின்பக்க டிசைன் தான். தற்போது வரை நாம் பார்த்த நத்திங் போன்களில் இருந்து வேறொரு டிசைனைக் கொண்டிருக்கிறது புதிய ஸ்மார்ட்போன்.
நத்திங்
நத்திங்கின் புதிய விலை குறைவான ஸ்மார்ட்போன்:
நத்திங் போன் (2a) எனக் குறிப்பிடப்படும் இந்த விலை குறைவான ஸ்மார்ட்போனை, 2024 பிப்ரவரியில் பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வில் அந்நிறுவனம் அறிமுகப்படுத்தலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மேலும், இந்தப் புதிய ஸ்மார்ட்போனில் குவால்காமிற்குப் பதிலாக மீடியாடெக்கின் டைமன்சிட்டி 7200 ப்ராசஸரை நத்திங் நிறுவனம் பயன்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
அதன் பின்பக்க டிசனைப் பொருத்தவரை, வட்டவடிவ பிரேமிற்குள் இரண்டு கேமராக்கள் படுக்கைவசமாகப் பொருத்தப்பட்டிருக்கின்றன. மேலும், அந்த வட்ட வடிவ பிரேமிற்குள்ளேயே பிளாஷ் லைட்டும், அந்த பிரேமைச் சுற்றி கிளில் லைட்டும் இடம் பெற்றிருக்கிறது.
இதனையும் மற்றொரு மிட் ரேஞ்சு ஸ்மார்ட்போனாக நத்திங் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.