நத்திங் போன் (2)வின் விலையை ரூ.5,000 வரை குறைத்த நத்திங் நிறுவனம்
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான கார்ல் பெய்யின் கீழ் உருவாக்கப்பட்ட நத்திங் நிறுவனம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்களுடைய இரண்டாவது ஸ்மார்ட்போனான நத்திங் போன் (2)-வை உலகமெங்கும் வெளியிட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் அனைத்து வேரியன்ட்களின் விலையையும் ரூ.5,000 வரை குறைத்திருக்கிறது நத்திங் நிறுவனம். இதனைத் தொடர்ந்து நத்திங் போன் (2)வின் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட மாடலானது ரூ.39,999 விலையில் இனி விற்பனை செய்யப்படவிருக்கிறது. அதேபோல், நத்திங் போன் (2)வின் 12GB/256GB வேரியன்டானது ரூ.44,999 விலையிலும், டாப் எண்டான 12GB/512GB வேரியன்டானது ரூ.49,999 விலையிலும் விற்பனை செய்யப்படவிருக்கிறது.
CMF சார்ஜருக்கும் தள்ளுபடி வழங்கிய நத்திங்:
நத்திங் நிறுவனமானது குறைந்த விலை மின்னணு துணை உபகரங்களை விற்பனை செய்யம் பொருட்டு 'CMF by Nothing' என்ற புதிய பிராண்டு ஒன்றையும் அறிமுகப்படுத்தியது. அந்த பிராண்டின் கீழ் ஒரு ஸ்மார்ட்வாட்ச், ஒரு அதிவேக சார்ஜர் மற்றும் ஒரு ஏர்பாடு என மூன்று புதிய மின்னணு சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் 65W GaN அதிவேக சார்ஜரானது ரூ.2,999 விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டது. தற்போது இதே சார்ஜரை நத்திங் போன் (2)வுடன் சேர்த்து வாங்கும் போது ரூ.1,000 தள்ளுபடியுடன் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்திருக்கிறது நத்திங். ரூ.5,000 நிரந்தரத் தள்ளுபடி பெற்ற நத்திங் போன் (2)வுடன் 65W CMF அதிவேக சார்ஜரை ரூ.1,999 விலையில் இனி பெற்றுக் கொள்ள முடியும்.
நத்திங் போன் (2): வசதிகள்
நத்திங் போன் (2)வில், 120Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட 6.7-இன்ச் LTPO AMOLED டிஸ்பிளேவைக் கொடுத்திருக்கிறது நத்திங். மேலும், பின்பக்கம் 50MP சோனி IMX890 முதன்மை கேமரா மற்றும் 50MP சாம்சங் JN1 அல்ட்ரா-வைடு சென்சார் அடங்கிய டூயல் கேமரா செட்டப் மற்றும் முன்பக்கம் 32MP செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டிருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸரைக் கொண்டிருக்கும் போன் (2)வில். 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங், 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதிகளுடன் கூடிய 4,700mAh பேட்டரியை அளித்திருக்கிறது நத்திங். ரூ.5,000 தள்ளுபடியுடன் இந்த நத்திங் போன் (2) ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.