வெளியானது நத்திங் நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'நத்திங் போன் (2)'
ஒரு வருடத்திற்கு முன்பு தங்களுடைய முதல் ஸ்மார்ட்போனான போன் (1)-ஐ வெளியிட்டது நத்திங். நீண்ட எதிர்பார்ப்புகளுக்கிடையே தங்களது ஃப்ளாக்ஷிப்பான 'போன் (2)' ஸ்மார்ட்போனை வெளியிட்டிருக்கிறது அந்நிறுவனம். போன் (1)-ஆனது மிட்ரேஞ்சு போனாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இந்த போன் (2)-வை ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் வகையில் உருவாக்கியிருக்கிறது நத்திங். சரி என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது இந்த புதிய நத்திங் ஃப்ளாக்ஷிப்? போன் (2)-வில் 120Hz ரெப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 6.72 இன்ச் LTPO OLED டிஸ்பிளேவைக் கொடுத்திருக்கிறது நத்திங். போன் (1)-ல் கொடுக்கப்பட்டதைப் போலவே 50MP முதன்மைக் கேமரா மற்றும் 50MP அல்ட்ரா-வைடு கேமராவை புதிய ஸ்மார்ட்போனிலும் கொடுத்திருக்கிறது நத்திங். செல்ஃபி கேமரா மட்டும் முந்தைய 16MP-யில் இருந்து 32MP-க்கு அப்கிரேடு ஆகியிருக்கிறது.
நத்திங் போன் (2): ப்ராசஸர் மற்றும் விலை
இந்த புதிய போன் (2)-வில் குவால்காமின் கடந்தாண்டு ஃப்ளாக்ஷிப்பான ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 ப்ராசஸரைக் கொடுத்திருக்கிறது நத்திங். போன் (1)-ல் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், புதிய போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய 4,700mAh பேட்டரியை அளித்திருக்கிறது நத்திங். இத்துடன் 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 5W ரிவர்ஸ் சார்ஜிங் வசதியும் உண்டு. இந்த புதிய போனில் பெரிய அப்கிரேடு என்றால் அது புதிய 'நத்திங் OS 2.0' சாப்ட்வேர் அப்டேட் தான். இந்தியாவில் புதிய போன் (2)வின் 8GB+128GB வேரியன்டை ரூ.44,999 விலையிலும், 12GB+256GB வேரியன்டை ரூ.49,999 விலையிலும், 12GB+512GB வேரியன்டை ரூ.54,999 விலையிலும் வெளியிட்டிருக்கிறது நத்திங். ஜூலை-21 முதல் இதன் விற்பனை தொடங்குகிறது.