விண்கல் மட்டுமல்ல எரிமலைகளும் டைனோசர்களின் அழிவில் பங்காற்றியிருக்கலாம்: புதிய ஆய்வு
165 மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் வலம் வந்து கொண்டிருந்த டைனோசர்கள், 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக பூமியிலிருந்து முழுவதுமாக அழிந்தன. மாபெரும் விண்கல் ஒன்று பூமியின் மேற்பரப்பின் மீது மோதியதாலேயே டைனோசர்கள் அழிந்திருக்கின்றன. இந்நிலையில், தற்போது டைனோசர்களின் அழிவு குறித்த மேலும் சில புதிய தகவல்களை அறிவியலாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். அதன்படி, தொடர்ச்சியான எரிமலை வெடிப்புகளும், அதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றமும், டைனோசர்களின் அழிவுக்கு கூடுதல் காரணமாக இருக்கலாம் எனக் கண்டறிந்திருக்கின்றனர். மேலும், இது டைனோசர்களின் இறுதியான அழிவு (விண்கல் மோதல்) ஏற்படுவதற்கு முன்பே, அதற்காக பூமியை ஆயத்த நிலையில் வைத்திருந்திருக்கலாம் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு:
இந்த சமீபத்திய ஆய்வானது மேற்கு மற்றும் மத்திய இந்தியாவின தக்கான பீடபூமியின் உள்ள டெக்கான டிராப்ஸிலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இத்தாலி, நார்வே, ஸ்வீடன் மற்றும் அமேரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் பங்கெடுத்திருக்கிறார்கள். இந்த ஆய்வு முடிவுகள் ஜர்னல சயின்ஸ் அட்வான்ஸ் ஆய்விதழில் வெளியிடப்பட்டிருக்கிறது. இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட எரிமலைப் பெருவெடிப்புகளின் மூலம் சல்ஃபர் மற்றும் ப்ளோரின் வலிமண்டலத்தில் கலந்து, அதுவே காலநிலை மாற்றத்திற்கு வித்திட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தக்கான பீடபூமியில் உள்ள பாறை மாதிரிகளை சோதனை செய்து, அதன் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வலிமண்டலத்தில் கலந்து சல்ஃபர் மற்றும் ப்ளோரினின் அளவைக் கணக்கிட்டிருக்கின்றனர்.