இந்தியாவில் வெளியானது ஜியோவின் இரண்டாவது லேப்டாப்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் தங்களது முதல் லேப்டாப் வெளியீட்டைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவில் தங்களது இரண்டாவது லேப்டாப்பான ஜியோபுக்கை (JioBook) வெளியிட்டிருக்கிறது ஜியோ. 4G சிம் கார்டு வசதியுடனேயே இந்த லேப்டாப்பையும் வெளியிட்டிருக்கிறது ஜியோ. 11.6 இன்ச் HD டிஸ்பிளே, 4GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் வசதிகளைக் கொண்டிருக்கிறது புதிய ஜியோ லேப்டாப். மைக்ரோ SD கார்டின் உதவியுடன் ஸ்டோரேஜை 256GB வரை அதிகரித்துக் கொள்ள முடியும். வை-பை, ப்ளூடூத் 5, HDMI மினி போர்ட், 3.5மிமீ ஹெட்போன்க ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் 2MB வெப்கேம் ஆகிய வசதிகள் ஜியோவின் இந்த புதிய லேப்டாப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஜியோபுக்: ப்ராசஸர் மற்றும் விலை
கடந்தாண்டு வெளியான ஜியோ லேப்டாப்பில் ஸ்னாப்டிராகன் 665 ப்ராசஸர் பயன்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் ஜியோபுக்கில் மீடியாடெக் MT 8788 ப்ராசஸரைப் பயன்படுத்தியிருக்கிறது ஜியோ. இத்துடன் ஆண்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்ட ஜியோOS இயங்குதளத்தைப் பெற்றிருக்கிறது புதிய ஜியோ லேப்டாப். கடந்தாண்டு வெளியான லேப்டாப்பை விட சற்று கூடுதல் அப்டேட்களைப் பெற்றிருக்கிறது தற்போதைய ஜியோபுக். எனவே, விலையும் அதனை விட சற்று கூடுதலாக ரூ.16,499 விலையில் வெளியிடப்பட்டிருக்கிறது. இது கடந்தாண்டு வெளியான மாடலை விட 800 ரூபாய் அதிகம். ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் இந்த ஜியோபுக் விற்பனை செய்யப்படவிருக்கும் நிலையில், அமேசான் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் தளங்கள் மூலம் தற்போதே முன்பதிவும் செய்து கொள்ளலாம்.