Page Loader
பயனாளர்களுக்கு இலவச டிவி.. அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க நிறுவனம்!
இலவச டிவி வழங்கும் நிறுவனம்

பயனாளர்களுக்கு இலவச டிவி.. அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க நிறுவனம்!

எழுதியவர் Prasanna Venkatesh
May 16, 2023
01:00 pm

செய்தி முன்னோட்டம்

ஒரு நிறுவனம் உங்களுக்கு இலவசமாக டிவி ஒன்றைத் தருகிறோம் என்று கூறினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு சலுகையை அறிவித்திருக்கிறது அமெரிக்காவைச் சேர்ந்த டெல்லி (Telly) நிறுவனம். அமெரிக்காவில் வழங்கப்பட்டு வரும் 'ப்ளூட்டோ டிவி' சேவையின் துணை நிறுவனரான இல்ஸா போசின் என்பவர் தான் இந்த நிறுவனத்தையும் உருவாக்கியிருக்கிறார். விளம்பரங்களுடன் சேர்த்து வழங்கப்படும் இலவச மென்பொருள் சேவையைப் போல, விளம்பரங்களை மையமாகக் கொண்டு வழங்கப்படும் இலவச வன்பொருள் (Hardware) சேவை இது. இந்த திட்டத்தின் மூலம் அமெரிக்க பயனாளர்களுக்கு 5,00,000 டிவிக்களை இலவசமாக வழங்கவிருக்கிறது அந்நிறுவனம். இந்த இலவச டிவிக்கான முன்பதிவையும் அதன் இணையப்பக்கத்தில் தொடங்கிவிட்டது. அந்நிறுவனத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் வரை அந்த டிவி-யை நாம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அமெரிக்கா

என்ன நிபந்தனைகள்: 

சாதாரணமாக டிவியில் இருக்கும் பெரிய திரையுடன். கூடுதலாக ஒரு சிறிய திரையும் அந்தத் டிவியில் சேர்த்துக் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தத் திரையில் எப்போதும் விளம்பரங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். அதனை நாம் தடுக்க முடியாது. இந்தக் குட்டித் திரையில் விளம்பரங்கள் மட்டுமல்லாது, இந்தத் திரையில் நாம் ஸ்மார்ட்போனில் பயன்படுத்துவது போல வாணிலை அறிவிப்பு, ஸ்டாக் மார்க்கெட் நிலவரங்கள் போன்ற விட்ஜெட்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், நாம் என்ன டிவியில் பார்க்கிறோம் எவ்வளவு நேரம் பார்க்கிறோம் உள்ளிட்ட மற்றும் இதற்கும் மேலான தகவல்களையும் அந்நிறுவனம் சேகரித்துக் கொள்ளுமாம். மேற்கூறிய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் அந்த டிவியை நிறுவனத்திடமே திருப்பி அளிக்க வேண்டும் அல்லது அந்த டிவிக்கு உண்டான தொகையை அளிக்க வேண்டும்.