யாரிந்த லிண்டா? இவர் வகித்த பதவிகளின் பட்டியல் இங்கே
ட்விட்டர் தளத்தின் புதிய சிஈஓ பற்றி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. எலான் மஸ்க், டிவிட்டருக்கு இன்னும் சில வாரங்களில் தலைமை பொறுப்பேற்க லிண்டா யாக்கரினோ என்ற ஒரு பெண்மணியைத் தேர்வு செய்ததாக அறிவித்திருந்தார். யாரிந்த லிண்டா? இவரது அனுபவம் மற்றும் வகித்த பதவிகளின் விவரங்களை இங்கே பார்க்கலாம்! லிண்டா NBCUவின் குளோபல் விளம்பரம் மற்றும் பார்ட்னர்ஷிப்களின் சேர்மனாக செயல்பட்டு வருகிறார். இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக NBCUவில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக, டர்னர் என்ற நிறுவனத்தில், லிண்டா கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் விளம்பர விற்பனைப் பிரிவில் பணியாற்றியுள்ளார். விளம்பரத் துறையில் பல தசாப்தங்கள் பணிபுரிந்த அனுபவம் இவருக்கு உள்ளது. ஆனால், டிவிட்டர் தலைமைப் பொறுப்பேற்க இது போதுமா?
விளம்பர நிர்வாகியின் அனுபவம் டிவிட்டருக்கு கைகொடுக்கும்!
சேர்மனாக பணிபுரியும் லிண்டாவுக்கு விளம்பரத்துறையில் இருக்கும் அனுபவம், தொடர்புகள், உள்ளிட்டவை எலான் மஸ்க்கிற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும். மேலும், லிண்டா உலக பொருளாதார மன்றத்தின் தலைவராகவும் செயல்படுகிறார். இதன் மூலம், பலதரப்பட்ட துறைகளில் இருக்கும் உயர்பதவி வகிப்பவர்கள், வணிகர்கள், அரசியல்வாதிகள் என்று பலருடனும் எளிதாக தொடர்பு கொள்ளும் திறனைக் குறிக்கிறது. வணிக உலகம் மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் டேலன்ட் மேனேஜ்மென்ட் குழுவின் தலைமை நிர்வாகியாக செயல்படும் லிண்டாவுக்கு பிரபலங்களிடமும் பரிச்சயம் இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூட்டாளியாக அவர் மிகவும் பிரபலமானவர். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல, இவர் ஒரு கான்ஃபரன்சில் எலான் மஸ்க்கை பேட்டி எடுத்துள்ளார். அதில், டிவிட்டரில் விளம்பரதாரர்களுக்கான ப்ரொடக்க்ஷன் மற்றும் ஃப்ரீ ஸ்பீச் அதிகம் விவாதிக்கப்பட்டது.