LOADING...
Netflix சேவை முடக்கம்; அமெரிக்கா மற்றும் இந்தியப் பயனர்கள் பாதிப்பு
'Stranger Things' இறுதி சீசன் வெளியான சில நிமிடங்களிலேயே இந்த சேவை முடக்கம் ஏற்பட்டது

Netflix சேவை முடக்கம்; அமெரிக்கா மற்றும் இந்தியப் பயனர்கள் பாதிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 27, 2025
08:58 am

செய்தி முன்னோட்டம்

உலகளவில் பிரபலமான ஓடிடி தளமான நெட்ஃபிலிக்ஸ் (Netflix), அமெரிக்காவில் ஒரு பெரிய சேவைக் கோளாறை சந்தித்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டதாக நூற்றுக்கணக்கான பயனர்கள் புகார் அளித்துள்ளனர். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தொடரான 'Stranger Things' இறுதி சீசன் வெளியான சில நிமிடங்களிலேயே இந்த சேவை முடக்கம் ஏற்பட்டது. புதிய சீசனை பார்க்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே திரைகள் உறைந்துபோனதாகவும், செயலி திடீரென செயலிழந்ததாகவும் பயனர்கள் சமூக வலைதளங்களில் புகாரளித்தனர்.

விவரம்

பாதிப்பு விவரம்

சம்பவம் நடந்த நேரத்தில், அமெரிக்காவில் மட்டும் 8,000-க்கும் அதிகமானோர் சேவை முடக்கம் குறித்துப் புகார் அளித்ததாக Downdetector தகவல் தெரிவித்துள்ளது. Downdetector-ன் விவரக்குறிப்பின்படி, 51 சதவீத புகார்கள் ஸ்ட்ரீமிங் பிரச்சனைகளுடனும், 41 சதவீத புகார்கள் சர்வர் பிரச்சனைகளுடனும் தொடர்புடையவை. அமெரிக்காவை போலவே, இந்தியாவிலும் நூற்றுக்கணக்கான பயனர்கள் Netflix சேவையை பயன்படுத்துவதில் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்தச் சேவைக் கோளாறுக்கான காரணம் குறித்து நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் எந்தவித அதிகாரப்பூர்வ கருத்தையும் இது வரை தெரிவிக்கவில்லை.

கோளாறு

நெட்ஃபிலிக்ஸ் சேவை சீரானது: அதீதப் பார்வையாளர் சுமையே காரணமா?

'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5' வெளியான சில நிமிடங்களில் ஏற்பட்ட மிகப் பெரிய தொழில்நுட்பக் கோளாறு, சிறிது நேரத்திலேயே படிப்படியாகச் சரிசெய்யப்பட்டு சேவை மீட்கப்பட்டது. சேவை முடங்கியதற்கான காரணம், 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ்' இறுதி சீசனைப் பார்ப்பதற்காக ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான ரசிகர்கள் தளத்திற்குள் நுழைந்ததால் ஏற்பட்ட அதிகப்படியான டிராஃபிக் தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தொடருக்கான மிக அதிக எதிர்பார்ப்பு காரணமாக, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்தின் சர்வர்கள் திடீரென சுமை தாங்காமல் தற்காலிகமாக செயலிழந்தன. கடந்த 2022-ஆம் ஆண்டில் 'ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 4' வெளியானபோதும் இதேபோன்று சர்வர் முடக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.