Loading...
ஸ்ட்ரீமிங் துறையில் புதிய கூட்டணி: நெட்ஃபிலிக்ஸ், அமேசான், யூடியூப் கைகோர்ப்பு! பின்னணி என்ன?
Netflix, அமேசான், யூடியூப் புதிய கூட்டணி

ஸ்ட்ரீமிங் துறையில் புதிய கூட்டணி: நெட்ஃபிலிக்ஸ், அமேசான், யூடியூப் கைகோர்ப்பு! பின்னணி என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Sep 15, 2026
04:38 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை ஆணையங்கள், விளையாட்டு போட்டிகளின் நேரலை ஒளிபரப்பு உரிமைகளை ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு வழங்குவது தொடர்பாக விளையாட்டுக் கூட்டமைப்புகளிடம் கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளன. இதன் எதிரொலியாக, உலகின் முன்னணி டிஜிட்டல் தளங்களான நெட்ஃபிலிக்ஸ், அமேசான் மற்றும் யூடியூப் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஒரு புதிய கொள்கை கூட்டணியை அமைத்துள்ளன. 'ஸ்ட்ரீமிங் ஆக்சஸ் அண்ட் சாய்ஸ் அலையன்ஸ்' (SACA) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கூட்டணி, பொழுதுபோக்கு துறையில் தொழில்நுட்ப ரீதியிலான புத்தாக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் தொழில்நுட்ப-நடுநிலை கொள்கைகளுக்காக வாதாடுவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலக்குகள்

பிக்-டெக் ஆதரவு மற்றும் கொள்கை இலக்குகள்

இந்த புதிய கூட்டணி, முன்னணித் தொழில்நுட்ப நிறுவனங்களின் வர்த்தகக் குழுவான டெக்நெட் அமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டுச் செயல்படவுள்ளது.

1961-ஆம் ஆண்டின் விளையாட்டு ஒளிபரப்புச் சட்டத்தின் கீழ் விளையாட்டுக் கூட்டமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள 'ஆண்டிட்ரஸ்ட் விதிகளிலிருந்து விலக்கு' குறித்து அமெரிக்க அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது.

இந்தச் சட்டத்தை பயன்படுத்தி போட்டிகளை சந்தா செலுத்தும் ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு மாற்றுவது தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், நேரலை விளையாட்டுப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸ்ட்ரீமிங் தளங்கள் தொடர்ந்து முதலீடு செய்வதை உறுதி செய்யும் கொள்கைகளுக்காக இந்த அமைப்பு பாடுபடும் என்று டெக்நெட் தெரிவித்துள்ளது.

தற்போதைய தேவை

கூட்டணிகளின் வரலாறு மற்றும் தற்போதைய தேவை

Netflix, அமேசான் மற்றும் கூகுளின் யூடியூப் ஆகிய நிறுவனங்கள் இதற்கு முன்பு இன்டர்நெட் அசோசியேஷன் என்ற அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தன.

ஆனால், உறுப்பினர்களின் விருப்பங்களும் இலக்குகளும் வேறுபட்டதால், அந்த அமைப்பு 2021-ஆம் ஆண்டின் இறுதியில் கலைக்கப்பட்டது.

ஸ்ட்ரீமிங் நிறுவனங்களின் தாய் நிறுவனங்கள் பலதரப்பட்ட வணிக நலன்களைக் கொண்டுள்ளதால், அவற்றுக்கான பொதுவான ஒரே ஒரு வர்த்தகக் குழு என்று எதுவும் தற்போது இல்லை.

இதன் காரணமாகவே, 2023-இல் உருவாக்கப்பட்ட 'ஸ்ட்ரீமிங் இன்னோவேஷன் அலையன்ஸ்' அமைப்பைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சவால்கள் மற்றும் அழுத்தங்களை எதிர்கொள்ள தற்போது இந்த புதிய பிரத்யேகக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT