237 நாட்கள், 10 கோடி மைல்கள்! பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள்; வரலாற்று சாதனை
செய்தி முன்னோட்டம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) ஏழு மாதங்களுக்கும் மேலாக தங்கி அறிவியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்த நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் குரூ-12 விண்வெளி வீரர்கள் நான்கு பேரும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். 237 நாட்கள் விண்வெளியில் சுற்றிய இவர்கள் பயணித்த ஸ்பேஸ்எக்ஸ் குரூ டிராகன் ஃப்ரீடம் விண்கலம், லாஸ் ஏஞ்சலஸ் கடற்கரைக்கு அருகே உள்ள பசிபிக் பெருங்கடலில் அக்டோபர் 8, 2026 அன்று வெற்றிகரமாகத் தரையிறங்கியது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
விண்வெளிப் பயணம்
விண்வெளிப் பயணத்தின் மைல்கற்கள் மற்றும் விண்வெளி வீரர்கள்
நாசாவின் விண்வெளி வீரர்களான ஜெசிகா மேயர், ஜேக் ஹாத்வே, ஐரோப்பிய விண்வெளி முகமையின் சோஃபி அடெனோட் மற்றும் ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி வீரர் ஆண்ட்ரி ஃபெட்யாயேவ் ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
பூமிக்குத் திரும்பிய இவர்கள் 10 கோடி மைல்களுக்கு மேல் பயணம் செய்து, பூமியை 3,792 முறைகளுக்கு மேல் சுற்றி வந்துள்ளனர்.
இதில் சோஃபி அடெனோட் விண்வெளியில் நடந்த முதல் பிரெஞ்சுப் பெண் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.
மருத்துவ ஆராய்ச்சிகள்
விண்வெளியில் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான மருத்துவ ஆராய்ச்சிகள்
விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த காலத்தில் மனித உடல்நலம் மற்றும் மருத்துவ தொழில்நுட்பங்கள் குறித்து நூற்றுக்கணக்கான மணிநேரங்களை ஆராய்ச்சிக்காக இவர்கள் செலவிட்டனர்.
புற்றுநோயை குணப்படுத்தும் செல்கள் உற்பத்தி, விண்வெளியிலேயே அவசரகால திரவங்கள் தயாரித்தல், நிமோனியா பாக்டீரியாவால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் நுண் ஈர்ப்பு விசையில் ரத்த ஓட்ட மாறுபாடுகள் ஆகியவை குறித்து இவர்கள் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுகள் எதிர்கால நிலவு மற்றும் செவ்வாய் கிரக பயணங்களுக்குப் பெரிதும் உதவும்.
நேரலை
அக்டோபர் 15 அன்று நேரலை செய்தியாளர் சந்திப்பு
பூமிக்குத் திரும்பிய விண்வெளி வீரர்களுக்குத் தேவையான மருத்துவ பரிசோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர்கள் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
வரும் அக்டோபர் 15 அன்று நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில், தங்களது 237 நாள் விண்வெளிப் பயணத்தின் அனுபவங்கள், விண்வெளி நடைபயணங்கள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த தகவல்களை இந்த விண்வெளி வீரர்கள் உலகளாவிய ஊடகங்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.