தொலைதூர குறுங்கோளான 'பென்னு'வில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கும் நாசா
வெற்றிகரமான ஏழு ஆண்டு திட்டத்திற்குப் பின்பு, பூமியிலிருந்து 8.23 கோடி கிமீ தொலைவில் இருக்ககூடிய, '101955 பென்னு' என்ற குறுங்கோளில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கிறது நாசாவின் OSIRIS-REx ஆய்வுக்கலம். விண்வெளியில் 6.21 பில்லியன் கிமீ பயணம் செய்து பென்னுவில் இருந்து சுமார் 250 கிராம் மாதிரியை எடுத்து வந்திருக்கிறது OSIRIS-REx ஆய்வுக்கலம். நீண்ட பயணத்திற்குப் பிறகு, நேற்று (செப்டம்பர் 24) உட்டா பாலைவனத்தில் மாதிரியுடன் தரையிறங்கியது OSIRIS-REx. அந்த மாதிரியானது பூமியின் சுற்றுச்சூழலால் கலப்படமாவதைத் தடுக்கும் பொருட்டு, அதனை சுத்தமான சீல் செய்யப்பட்ட அறைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது நாசா. வரும் நாட்களில் இந்த மாதிரியை சோதனைக்கு உட்படுத்தவிருக்கிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம்.
எப்போது தொடங்கப்பட்டது இந்தத் திட்டம்?
பென்னு குறுங்கோளில் இருந்து மாதிரியை எடுத்துவர 2016 செப்டம்பரில் OSIRIS-REx ஆய்வுக்கலனை அனுப்பியது நாசா. அதனைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு பென்னுவை அடைந்ததோடு, அந்த ஆண்டு முதல் பென்னு குறுங்கோளை சுற்றிவரத் தொடங்கியது OSIRIS-REx. அதன் பிறகு, 2020ம் ஆண்டில் பென்னு குறுங்கோளில் இருந்து மாதிரிகளை சேகரித்தது அந்த ஆய்வுக்கலன். பின்னர், 2021ம் ஆண்டு பூமிக்கு திரும்புவதற்கான பயணத்தைத் தொடங்கியது அந்த ஆய்வுக்கலன். 2021ல் தொடங்கிய OSIRIS-REx ஆய்வுக்கலனின் பயணம், நேற்றும் பூமியை அடைந்தவுடன் நிறைவடந்திருக்கிறது. ஒரு குறுங்கோளில் இருந்து மாதிரியை பூமிக்கு எடுத்து வரும் நாசாவின் முதல் திட்டம் இது. இத்திட்டத்திற்காக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்திருக்கிறது நாசா.
ஏன் பென்னு குறுங்கோளில் இருந்து மாதிரியை எடுத்து வரத் திட்டமிட்டது நாசா?
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, தொடக்க கால சூரிய குடும்பத்தின் மிச்சமாக பென்னு பார்க்கப்படுகிறது. தொடக்க காலத்தில் பூமி மற்றும் சூரிய குடும்பம் எப்படி உருவானது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டே பென்னுவில் இருந்து மாதிரியை எடுத்து வந்திருக்கிறது நாசா. தொடக்க காலத்தில் சூரிய குடும்பம் பரிணாம வளர்ச்சி அடைந்த போது, பல்வேறு கோள் மற்றும் குறுங்கோள்களுடன் ஏற்பட்ட மோதலிலேயே நமது பூமியானது உயிர்கள் வாழத் தேவையான அம்சங்களைப் பெற்றதாக விஞ்ஞாணிகள் கருதுகின்றனர். எனவே, பென்னுவை ஆய்வு செய்வதன் மூலம் பூமியில் உயிர்கள் தோன்றியது எப்படி என்பதற்கான விடையைக் கண்டறிய முடியும் என விஞ்ஞாணிகள் நம்புகிறார்கள்.
வேறு எந்தெந்த நாடுகள் பென்னு மாதிரிகளைப் பெறவிருக்கின்றன?
OSIRIS-REx கொண்டு வந்திருக்கும் பென்னுவின் மாதிரியை அமெரிக்கா மட்டுமல்லாது, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் ஆராய்ச்சி செய்யவிருக்கின்றன. இதற்காக கனடா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் பென்னு மாதிரியின் 4%-தத்தையும், ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன் 0.5%-தத்தையும் பகிர்ந்து கொள்ளவிருக்கிறது அமெரிக்கா. மேலும், இந்த மாதிரியின் சிறிய அளவை அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாகானத்திலுள்ள பாதுகாப்பு மையத்தில் பத்திரப்படுத்தவும் திட்டமிட்டிருக்கிறது அமெரிக்கா. வரும் நாட்களில் நாசாவின் ஜான்ஸன் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டரில் பென்னு மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் முடிவுகளை அக்டோபர் 11ம் தேதியன்று நாசா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.