விண்வெளி வீரர்களின் சிறுநீரை 98% மறுசுழற்சி செய்து புதிய சாதனை படைத்த நாசா
விண்வெளியில் உயிர் பிழைத்திருப்பதற்கான உபகரணங்களுள் மிக முக்கியமான ஒன்று தண்ணீர். பூமியிலிருந்து கொண்டு செல்லும் நீரை மட்டுமே சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி செய்து வரும் விண்வெளி வீரர்களால், விண்வெளியில் பயன்படுத்த முடியும். இந்நிலையில், பூமியில் இருந்து கொண்டு செல்லும் நீரை, 98% வரை மறுசுழற்சி செய்து சாதனை படைத்திருக்கிறது நாசா. பூமியில் இருந்து 100 மிலி தண்ணீரை கொண்டு சென்று ஒரு முறை பயன்படுத்திவிட்டார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பயன்படுத்திய தண்ணீரில் 98%, அதாவது 98 மிலிட்டரை மீண்டும் மறுசுழற்சி செய்ய முடிந்தால்?! அதைத் தான் தற்போது சாத்தியப்படுத்தியிருக்கிறது நாசா. இதற்கு முன்னர் 93%-ஆக இருந்த இந்த மறுசுழற்சியின் அளவு தற்போது 98%-ஆக அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது நாசா.
எப்படிச் சாத்தியம்?
விண்வெளி வீரர்கள் தண்ணீரைப் பயன்படுத்திய பிறகு, அவர்களது உடலில் இருந்து வெளியேறும் வியர்வைத் துளிகள், அவர்களது மூச்சுக் காற்றில் வெளியாகும் ஈரப்பதம் ஆகியவற்றை மேம்படுத்தப்பட்ட 'Dehumidifier' கொண்டு சேகரிக்கின்றனர். மேலும், விண்வெளி வீரர்களின் சிறுநீரில் இருக்கும் தண்ணீர் மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்து, இவையனைத்தையும் மறுசுழற்சி செய்து, மீண்டும் அவர்கள் பயன்படுத்தும் தண்ணீராக மாற்றுகின்றனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயன்படுத்தப்படும் 'Environmental Control and Life Support System'-ஆனது இந்த செயல்முறைகளை மேற்கொண்டு புதிய சாதனையைப் படைத்திருக்கிறது. "விண்வெளியில், வருங்காலத்தில் நாம் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணங்கள் மற்றும் சந்திரன், செவ்வாயில் நாம் மேற்கொள்ளும் நீண்ட காலத் திட்டங்களுக்கு, இந்தத் தொழில்நுட்பங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும்", எனத் தெரிவித்திருக்கிறார் நாசா விஞ்ஞானி ஒருவர்.