
வியாழன் கோளின் நிலவான கானிமீடில் உயிர் வாழத் தேவையான மூலக்கூறுகளைக் கண்டறிந்த நாசா விஞ்ஞானிகள்
செய்தி முன்னோட்டம்
நாசாவின் ஜூனோ விண்வெளித் திட்டத்தின் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு வியாழன் கோளின் பெருநிலவுகளுள் ஒன்றான கானிமீடில் (Ganymede) உயிர் வாழத் தேவையான சில மூலக்கூறுகள் இருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
2021ம் ஆண்டு ஜூன் மாதம் கானிமீடை அதன் தரைப் பகுதியிலிருந்து 1,046 கிமீ தூரத்தில் கடந்து சென்றது ஜூனோ விண்கலம். அப்போது அதில் பொருத்தப்பட்டிருக்கும் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவியானது கானிமீடு தரைப்பகுதியினை துல்லியமாக அகச்சிவப்பு (Infrared) படங்களாகப் படம்பிடித்தது.
அந்த அகச்சிவப்பு புகைப்படங்களைக் கொண்ட தற்போது கானிமீடில் உயிர் வாழத் தேவையான தாது உப்புகள் மற்றும் கரிம மூலக்கூறுகள் இருப்பதாகக் கண்டறிந்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
நாசா
கானிமீடில் என்ன வகையான கரிமை கலவைகளைக் கொண்டிருக்கிறது கானிமீடு:
முழுவதும் பனிக்கட்டியால் ஆன மேற்பரப்பைக் கொண்டிருக்கிறது கானிமீடு. ஆனால், இந்த பனிக்கட்டியினாலான மேற்பரப்பிற்கு அடியில் பெருங்கடல் இருக்கலாம் என யூகிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
கலிலியோ மற்றும் ஹபுள் உள்ளிட்ட தொலைநோக்கிகளின் உதவியுடன் இதற்கு முன்பே கானிமீடு குறித்த தகவல்களை சேகரித்திருக்கிறது நாசா. அப்போதே கானிமீடில் கரிம கலவைகள் இருக்கலாம் என எதிர்பார்த்தனர் ஆராய்ச்சியாளர்கள்.
தற்போது ஜூனோ விண்கலம் அளித்த தகவல்களின் உதவியுடன் கானிமீடில் கரிம கலவைகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கானிமீடில் ஹைடிரேட்டட் சோடியம் குளோரைடு, அமோனியம் குளோரைடு, சோடியம் பைகார்பனேட் மற்றும் அலிஃபாடிக் ஆல்டிஹைட்ஸ் உள்ளிட்ட கலவைகள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி
நாசாவின் ஜூனோ திட்டம்:
நாசாவின் ஜூனோ திட்டத்தின் ஒரு பகுதியாகவே கானிமீடு குறித்த இந்தத் தகவல்கள் ஜூனோ விண்கலம் மூலம் சேகரிக்கப்பட்டிருக்கின்றன.
வியாழனை ஆய்வு செய்ய 2011ம் ஆண்டு ஜூனோ திட்டத்தை செயல்படுத்தியது நாசா. அதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு வியாழனை சுற்றி வரத் தொடங்கியது ஜூனோ.
2025ம் ஆண்டு வரை செயல்படுத்தத் திட்டமிடப்பட்ட இந்த ஜூனோ திட்டத்தின் கீழ், வியாழன் கோளை மட்டுமல்லாது, வியாழன் கோள்களின் நிலவுகளை கடந்து செல்லும் போது அவை குறித்த தகவல்களையும் சேகரித்து வருகிறது நாசா.
இதுவரை ஜூனோ விண்கலத்தின் உதவியுடன், வியாழனின் நான்கு பெருநிலவுகளுள் ஜூனோ மற்றும் ஐரோப்பா ஆகிய நிலவுகள் குறித்த தகவல்களை சேகரித்திருக்கிறது நாசா. வரும் டிசம்பரில் அதன் மற்றொரு பெருநிலான ஐஓ குறித்த தகவல்களும் சேகரிக்கப்படவிருக்கின்றன.