LRO ஆய்வுக்கலனைக் கொண்டு சந்திரயான் 3 லேண்டரைப் படம்பிடித்த நாசா
நிலவைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் தங்களுடைய Lunar Reconnaissance Orbiter Camera (LRO Camera) மூலமாக, சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டரைப் படம்பிடித்திருக்கிறது நாசா. அந்தப் புகைப்படத்தைத் தற்போது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டிருக்கிறது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம். அந்தப் புகைப்படத்தில், விக்ரம் லேண்டரைச் சுற்றி வெண்மையான ஒளி போன்ற அமைப்பு ஒன்றும் இருக்கிறது. இந்த வெண்மையான ஒளி போன்ற அமைப்பானது, நிலவில் தரையிறங்கும் போது லேண்டரின் ராக்கெட்டால் நிலவின் மேற்பரப்பில் ஏற்பட்டிருப்பதாகவும் தங்களுடைய வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறது நாசா. இந்த LRO ஆய்வுக்கலனை, 2009ம் ஆண்டு நிலவின் 3D வரைபடத்தை உருவாக்குவதற்காக விண்ணில் செலுத்தியது நாசா. இன்றும் நிலவைச் சுற்றி வந்தபடியே அதனைப் படம்பிடித்து வரைபடத்தை உருவாக்கி வருகிறது LRO.