ஆண்ட்ராய்டைத் தொடர்ந்து IOS இயங்குதளத்திற்கான கோபைலட் செயலியை அறிமுகப்படுத்திய மைக்ரோஃசாப்ட்
தங்களுடைய பிங் செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை, கோபைலட் (Co-Pilot) என மறுபெயரிட்டு அறிமுகப்படுத்தியிருக்கிறது மைக்ரோஃசாப்ட் நிறுவனம். கடந்த சில நாட்களுக்கு முன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான AI வசதிகளுடன் கூடிய கோபைலட் செயலி வெளியாகியிருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இந்த செயலியை மைக்ரோஃசாப்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், கூகுள் பிளே ஸ்டோரில் பயனாளர்களின் பயன்பாட்டிற்காக இந்தச் செயலியானது பட்டியலிடப்பட்டிருந்தது. ஓபன்ஏஐயின் சமீபத்திய மேம்படுத்தப்பட்ட AI மாடல்களான, ஜிபிடி-4 மற்றும் டால்-இ 3 உள்ளிட்ட AI மாடல்களின் உதவியுடன் இயங்கும் வகையில் மைக்ரோஃசாப்டின் புதிய கோபைலட் செயலியானது உருவாக்கப்பட்டிருக்கிறது.
ஐஓஎஸ் இயங்குதளத்திலும் வெளியீடு:
ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கோபைலட் செயலியின் அறிமுகத்தைத் தொடர்ந்து, ஐஓஎஸ் இயங்குதளத்திற்கான கோபைலட் செயலியையும் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது மைக்ரோஃசாப்ட். ஐஓஎஸ், ஐபேடுஓஎஸ் மற்றும் மேக்ஓஎஸ் என ஆப்பிளின் பல்வேறு இயங்குதளங்களிலும் செயல்படும் வகையில் புதிய கோபைலட் செயலியை அறிமுகப்படுத்தியிருக்கிறது மைக்ரோஃசாப்ட். குறைந்தபட்சம் ஐஓஎஸ் 15 மற்றும் ஐபேடுஓஎஸ் 15 இயங்குதளங்களைக் கொண்டிருப்பவர்கள் மைக்ரோஃசாப்டின் இந்தப் புதிய கோபைலட் AI செயலியைப் பயன்படுத்த முடியும். அதேபோல், மேக் பயனாளர்கள், குறைந்தபட்சம் M1 ப்ராசஸர் மற்றும் மேக்ஓஎஸ் சோனோமா இயங்குதளத்தைக் கொண்டிருந்தால், மைக்ரோஃசாப்டின் கோபைலட் செயலியைப் பயன்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.