5 நாட்களுக்குள் மீண்டும் ஓபன்ஏஐயின் CEO ஆனார் சாம் ஆல்ட்மேன்
ஓபன்ஏஐயின் CEO சாம் ஆல்ட்மேன் 5 நாட்களுக்கு முன் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அந்த நிறுவனத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பதவி நீக்கம் செய்ப்பட்டத்தால் அதிர்ச்சி அடைந்த பல ஊழியர்கள் ஓபன்ஏஐ நிறுவனத்தை விட்டு விலக இருப்பதாக அறிவித்ததை அடுத்து, இன்று சாம் ஆல்ட்மேனை மீண்டும் தலைமை நிர்வாக அதிகாரியாகக் கொண்டுவருவதற்கும் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஓபன்ஏஐ அறிவித்துள்ளது. "பிரெட் டெய்லர், லாரி சம்மர்ஸ் மற்றும் ஆடம் டி ஏஞ்சலோ ஆகிய புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் ஓபன்ஏஐயின் CEOவாக சாம் ஆல்ட்மேன் திரும்புவதற்கு கொள்கையளவில் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளோம்" என்று அந்த நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
ஓபன்ஏஐயின் ட்விட்டர் பதிவு
CEO பதவி நீக்கத்தால் ஓபன்ஏஐயில் சலசலப்பு
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை முன்னெடுத்துச் செல்லும் ஓபன்ஏஐ நிறுவனமானது, கடந்த சில நாட்களாக தவறான விஷயங்களுக்காக தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது. முதலில் அந்நிறுவனத்தின் CEOவான சாம் ஆல்ட்மேனை, ஓபன்ஏஐ இயக்குநர் குழு பதவி நீக்கம் செய்ததிலிருந்து, மூன்று நாட்களுக்குள் மூன்று CEO-க்கள் மாற்றப்பட்டனர். சாம் ஆல்ட்மேனின் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து, இடைக்கால CEOவாக மிரா முராட்டி, எம்மட் ஷியர் உள்ளிட்டோர் மூன்று நாட்களுக்குள் அடுத்தடுத்து மாற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து, புதிய சிஇஓவை எதிர்த்தும், சாம் ஆல்ட்மேனை வேண்டியும் 500-க்கும் மேற்பட்ட ஓபன்ஏஐ ஊழியர்கள் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில், ஊழியர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ஓபன்ஏஐயின் CEOவாக மீண்டும் சாம் ஆல்ட்மேன் நியமிக்கப்பட்டுள்ளார்.