எலான் மஸ்க் vs மார்க் ஸூக்கர்பெர்க்: பின்வாங்குகிறாரா மார்க்?
எலான் மஸ்க் மற்றும் மார்க் ஸூக்கர்பர்க் இருவரும் கூண்டுச் சண்டை ஒன்றில் மோதிக் கொள்ளும் நோக்கத்தோடு, கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் பதிவுகளைப் பகிர்ந்து வந்து கொண்டிருந்தார்கள். எலான் மஸ்க்கின் எக்ஸூக்குப் (முன்னதாக ட்விட்டர்) போட்டியாக த்ரெட்ஸ் என்ற சமூக வலைத்தளத்தை மார்க் ஸூக்கர்பர்க் அறிமுகப்படுத்தினார். த்ரெட்ஸ் தளத்தை, ட்விட்டரின் நகல் எனக் குறிப்பிட்ட எலான் மஸ்க், 'மார்க் ஸூக்கர்பர்க் சரி என்றால் அவருடன் கூண்டுச் சண்டையில் மோதிக்கொள்ளவும் தயாராக இருப்பதாக' எக்ஸ் பயனர் ஒருவரின் பதிவுக்கு மறுமொழி செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து மார்க் ஸூக்கர்பர்க்கும், 'எந்த இடத்தில் வைத்துக்கொள்ளலாம்' எனப் பதிவிட இருவருக்குமிடையே சமூக வலைத்தளத்திலேயே வார்த்தைப் போர் முற்றியது.
பின்வாங்குகிறாரா மார்க் ஸூக்கர்பெர்க்?
இவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் கூண்டுச் சண்டையை, எக்ஸ் தளத்தில் ஒளிபரப்பு செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நன்கொடையாக அளிக்கவிருப்பதாக அறிவித்தார் எலான் மஸ்க். இந்நிலையில், எலான் மஸ்க்குடனான இந்த மோதலில் இருந்து நகர்ந்து, விளையாட்டுக்களை தீவிரமாக எடுத்துக் கொள்பவர்களுடன் போட்டியிடுவதில் கவனம் செலுத்தப்போவதாக தன்னுடைய த்ரெட்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மார்க் ஸூக்கர்பர்க். குறிப்பிட்ட தேதியில் சண்டையை வைத்துக் கொள்ளலாம் என மார்க் ஸூக்கர்பர்க் ஒரு தேதியைக் குறிப்பிட்டும், எலான் மஸ்க் அதனைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் சாக்குகளைக் சொல்வதாக தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் அவர். மார்க்கின் த்ரெட்ஸ் பதிவுக்கு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் மறுமொழி செய்யும் வகையில் பதிவிட்டிருக்கும் எலான் மஸ்க், 'ஸூக்கர்பர்க் ஒரு கோழை' எனப் பதிவிட்டிருக்கிறார்.