MMA பயிற்சியின் போது முட்டிக்கால் தசையில் ஏற்பட்ட காயம்; மார்க் ஸூக்கர்பெர்க்குக்கு அறுவை சிகிச்சை
செய்தி முன்னோட்டம்
மெட்டாவின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸூக்கர்பர்க் MMA சண்டைப் போட்டிகளிலும் சமீப காலமாக பங்கெடுத்து வருகிறார். மேலும், இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள தொடர்ந்து பயிற்சியும் எடுத்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் MMA பயிற்சியின் போது அவருடைய முட்டிக்கால் ACL திசுவில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, அந்தக் காயத்தை சரி செய்ய அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது.
இந்தத் தகவலை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவாகப் பதிவிட்டு தெரியப்படுத்தியிருக்கிறார் மார்க் ஸூக்கர்பெர்க். அவர் குணமாக சில மாத கால அவகாசமாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்க் ஸூக்கர்பெர்க்
MMA போட்டியில் கலந்து கொள்வதை தவிர்த்த ஸூக்கர்பெர்க்:
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருந்த MMA போட்டியில் மார்க் ஸூக்கர்பெர்க் கலந்து கொள்வதாக இருந்த நிலையில், தற்போது இந்த காயத்தினால் அதில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
எனவே, MMA போட்டிகளில் கலந்து கொள்வதை தள்ளி வைத்திருப்பதாகவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் மார்க் ஸூக்கர்பெர்க்.
மேலும், காயம் ஏற்பட்டாலும் தொடர்ந்து MMA பயிற்சிகளிலும் போட்டிகளிலும் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அவர், காயம் குணமான பின்பு MMA தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடவிருப்பதாகவும் தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
மார்க் ஸூக்கர்பெர்க் விரைவாக குணமடைய தாங்கள் பிரார்த்தனை செய்வதாக பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.