புறக்கோள் ஒன்றில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய முயற்சிக்கும் விஞ்ஞானிகள்!
பூமியைத் தவிர இவ்வண்டத்தின் பிற கோள்களில் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்தே வருகிறார்கள். இவ்வகையான விண்வெளி ஆராய்ச்சிகளில் முன்னணியில் இருக்கிறது நாசா. கடந்த 2021ம் ஆண்டு நாசா விண்ணில் நிலைநிறுத்திய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியுடன் 'K2-18 b' என்ற புறக்கோள் ஒன்றில் கார்பனை அடிப்படையாகக் கொண்ட மூலக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. பூமியவை விட 8.6 மடங்கு பெரிய புறக்கோளான இந்த K2-18 b-யானது, பூமியிலிருந்து 120 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கக்கூடிய K2-18 என்ற சிறிய நட்சத்திரத்தை வலம்வந்து கொண்டிருக்கிறது. இந்தப் புறக்கோளை 2015ம் ஆண்டே விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கின்றனர். எனினும், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியுடன், தற்போதே அதனை துல்லியமாக ஆய்வு செய்ய முடிந்திருக்கிறது.
K2-18 b புறக்கோளில் தண்ணீரின் இருப்பு:
இந்தப் புறக்கோளில், அமோனியா இல்லாமல் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் மீத்தேன் ஆகியவற்றின் இருப்பு மட்டும் கண்டறியப்பட்டிருக்கிறது. எனவே, ஹைட்ரஜன் அதிகம் நிறைந்த வலிமண்டலத்தை இந்தப் புறக்கோள் கொண்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். மேலும், அந்த ஹைட்ரஜன் வலிமண்டலத்திற்குக் கீழே திரவ நிலையில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தான் சுற்றி வரும் நட்சத்திரத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவில் ஹேபிட்டபிள் ஸோனில் வலம் வந்து கொண்டிருக்கிறது K2-18 b புறக்கோள். எனவே, அதிக வெப்பத்தையும் கொண்டிருக்காமல், அதீத குளிர்ச்சியாகவும் இல்லாமல், தண்ணீரை திரவ நிலையில் வைத்திருப்பதற்கு ஏற்ற சூழ்நிலை அக்கோளில் இருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
உயிர்கள் வாழ்வதற்கா சாத்தியக்கூறுகள் இருக்கிறதா?
இதில் முக்கியத் திருப்பமாக, K2-18 b புறக்கோளில் டைமெத்தில் சல்பைடை (Dimethyl Sulfide) கண்டறியப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டைமெத்தில் சல்படானது, பூமியில் தண்ணீரில் வாழும் பைட்டோபிளாங்க்டன் என்னும் நுண்ணிய ஒரு செல் உயிரியால் வெளியிடப்படும் மூலக்கூறுக் கலவையாகும். K2-18 b புறக்கோளில் வலிமண்டலத்தில் டைமெத்தில் சல்பைடின் இருப்பு இருக்கிறதா எனக் கண்டறிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் உதவியுடன் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் உள்ள மிட் இன்ஃப்ராரெட் கருவி (MIRI) பயன்படுத்தப்பட்டு வருகிறது.