செப்டம்பர் 19ல் வெளியாகிறது ஜியோ ஏர்ஃபைபர் இணைய சாதனம்
வயர்லெஸ்ஸாக இணையதள சேவை வழங்கும் தங்களுடைய புதிய ஜியோ ஏர்ஃபைபர் சாதனத்தை வரும் செப்டம்பர் 19ம் தேதி ஜியோ நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. அந்த அறிவிப்பை ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. புதிய ஜியோ ஏர்ஃபையர் சாதனம் ஒன்றை உருவாக்கியிருப்பாதாகக் கடந்தாண்டு வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் அறிமுகப்படுத்தியிருந்தார் முகேஷ் அம்பானி. அறிமுகப்படுத்தப்பட்டு ஒரு வருடம் கழித்து, தற்போது பொதுப் பயனாளர்களின் விற்பனைக்கு வெளியிடப்படவிருக்கிறது ஜியோ ஏர்ஃபைபர். ஜியோ ஏர்ஃபைபர் என்பது நாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லக்கூடிய வகையிலான, பிராண்டுபேண்டு சேவையைப் போலவே இணைய சேவை வழங்கக்கூடிய ஒரு மின்னணு சாதனமாகும்.
ஜியோ ஏர்ஃபைபர்:
அதிகபட்சமாக நொடிக்கு 1.5GB வேகத்தில் தகவல் பரிமாற்ற வசதியை அளிக்கும் வகையில் புதிய ஏர்ஃபைபரை உருவாக்கியிருக்கிறது ஜியோ. தொலைத்தொடர்பு துறையில் ஜியோவின் வருகை சந்தையையே புரட்டிப் போட்டது போல, இந்த ஜியோ ஏர்ஃபைபரின் அறிமுகம், பிராண்டுபேண்டு இணையதள சேவை வழங்கலில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேரண்டல் கண்ட்ரோல்கள், வை-பை 6, 5G வசதி மற்றும் உள்ளேயே கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு வளையங்களைக் கொண்டு வெளியாகவிருக்கிறது ஜியோ ஏர்ஃபைபர். இந்தியாவில் இந்த இணைய சேவை வழங்கும் சாதனத்தை ரூ.6,000 விலையில் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.